அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மாதங்களாகவே எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருவதுடன், புதிதாக பல்வேறு வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.
தற்போது மேலும் ஒரு புதிய வசதியாக, அரசு அடையாள ஆவணங்களைக் கொண்டு எக்ஸ் கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது அத்தளம்.
இதன் மூலம், எக்ஸ் தளத்தில் வேற்று நபர்களைப் போல சித்தரிக்க முயலும் கணக்குகள் அதிகரிப்பதைத் தடுப்பதோடு, சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும் என தங்கள் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது எக்ஸ்.
சமீப காலங்களில் புதிதாக அறிமுகப்படுத்தும் பல்வேறு வசதிகளை, தங்களுடைய கட்டண சேவைக்கு சந்தா செலுத்தியிருக்கும் பயனர்களுக்கு மட்டுமே வெளியிடுவதை வழக்கமாக்கியிருக்கிறது எக்ஸ். இந்தப் புதிய வசதியையும் கட்டண பயனாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தவிருக்கிறது அத்தளம்.
எக்ஸ்
புதிய வசதியினால் வேறு என்ன நன்மைகள்?
இது போன்ற தனிநபர் கணக்குகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, அரசு அடையாள ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை லிங்க்டுஇன் தளம் வழங்கி வருகிறது.
தற்போது அதே போன்ற ஒரு வசதியை தங்கள் தளத்திலும் அறிமுகப்படுத்தவிருக்கிறது எக்ஸ். பயனர்களின் அரசு ஆவணத்தை சரிபார்க்கும் நடைமுறையை மேற்கொள்ள இஸ்ரேலைச் சேர்ந்த 'Au10tix' என்ற நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது எக்ஸ்.
இந்த வசதியானது நம்பகத்தன்மையை அதிகரிப்பதோடு, வயது சார்ந்த உள்ளடக்கங்களையும் பயனர்களுக்கு எக்ஸால் வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அடையாள ஆவணங்களைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் பயனாளர்களின் கணக்குகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்த வசதியானது தனிநபர் கணக்குகளுக்கு மட்டுமே, பிற கணக்குகளுக்கு இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறது எக்ஸ்.