'Grok' என்ற புதிய AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் எலான் மஸ்க்கின் xAI
எக்ஸின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் xAI நிறுவனமானது தங்களுடைய முதல் AI மாடலான 'க்ராக்'கை (Grok) இன்று குறிப்பிட்ட எக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி, கூகுள் பார்டு மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் AI சாட்பாட்களைப் போலவே இந்த க்ராக்கும் லார்ஜ் லாங்குவேஜ் மாடல் மொழி மாதிரியை அடிப்படையாகக் கொண்டே இயங்கவிருக்கிறது. பீட்டா முறையில் குறிப்பிட்ட எக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும் இந்த AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தி சோதனை செய்யவிருக்கிறது xAI. அதனைத் தொடர்ந்து, பிற எக்ஸ் பயனாளர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க். இந்த க்ராக் AI சாட்பாட்டானது நிகழ் நேரத் தகவல்களுக்கு எக்ஸின் அனுகலைப் பெற்றிருப்பதாக எக்ஸ் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
ப்ரீமியம்+ பயனாளர்களுக்கு மட்டும்:
முதல் கட்ட சோதனைக்குப் பின்பு ப்ரீமியம்+ எக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும் இந்த க்ராக் AI சாட்பாட் பயன்பாட்டை வழங்கவிருக்கிறார் எலான் மஸ்க். கடந்த வாரம், தற்போதைய கட்டண சேவை திட்டத்துடன் கூடுதலாக இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது எக்ஸ். இந்தியாவில் இணையதளத்தை மட்டும் கொண்டு பயன்படுத்தும் வகையில் மாதம் ரூ.244 விலையில் அடிப்படைத் திட்டம் ஒன்றும், மாதம் ரூ.1,300 விலையில் ப்ரீமியம்+ திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னர் பயன்பாட்டில் இருந்த மாதம் ரூ.650 திட்டத்தை ப்ரீமியம் திட்டமாக மாற்றியது எக்ஸ். தற்போது இந்த க்ராக் AI சாட்பாட்டை ப்ரீமியம்+ பயனாளர்களுக்கு மட்டும் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
xAI-யின் க்ராக் vs பிற சாட்பாட்கள்:
பிற சாட்பாட்களானது நாம் கேட்கும் கேள்விக்கான தகவல்களை தங்களது தகவல் தளத்திலிருந்து, சில சாட்பாட்கள் இணையத்திலிருந்து பெற்று நமக்குத் தரும் திறனைக் கொண்டிருக்கின்றன. க்ராக்கும் அத்தகைய திறன்களைக் கொண்டிருந்தாலும், கூடுதாலக நகைச்சுவை உணர்வோடு நாம் கேட்கும் கேள்விக்கான பதிலை நமக்கு அளிக்குமாம். க்ராக்கின் நகைச்சுவை உணர்வு எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும் பயனாளர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், பிற சாட்பாட்களிலிருந்து விலகி இது எந்த வகையில் தனித்துவமாக இருக்கிறது மற்றும் பிற சாட்பாட்களை மிஞ்சிய திறனைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.