சாட் ஜிபிடி, பார்டுக்கு போட்டியாக களமிறங்கியது எலான் மஸ்கின் xAI
xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த மார்ச் மாதம் தொடங்கினாலும், அதன் பின்னர் நிறுவனம் குறித்த எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை (ஜூலை 12) xAI நிறுவனத்தின் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ள தகவலை, எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சாட் ஜிபிடியின் வருகைக்கு பிறகு, பல்வேறு நிறுவனங்களும் AI தொழில்நுட்பம் பக்கம் தங்கள் பார்வையை திரும்பியுள்ள நிலையில், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், அந்த நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், தற்போது எலான் மஸ்க்கும் இந்த போட்டியில் குதித்துள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க்கை மறக்காமல் வம்பிழுத்த எலான் மஸ்க்
xAI குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட எலான் மஸ்க், மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், இதையும் காப்பியடிக்க மாட்டார் என்று நம்புவதாக கூறி வம்பிழுத்துள்ளார். முன்னதாக, மெட்டா நிறுவனம் ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், அதை குத்திக்காட்டும் விதமாக எலான் மஸ்க் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். xAI குழுவில், முன்னாள் கூகுள் டீப் மைண்ட் ஊழியர்களான பாபுஷ்கின், டோபி போலன் மற்றும் முன்னாள் ஓபன்ஏஐ தொழில்நுட்ப பணியாளர் கைல் கோசிக் உட்பட AI துறையில் சிறந்து விளங்கும் பலர் உள்ளனர். ஜூலை 14ல் xAI குழு ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடலை நடத்துகிறது. நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அப்போது நிறுவனம் குறித்த தெளிவான பார்வை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.