Page Loader
வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனி மண்டலத்தில் துளையை ஏற்படுத்திய எலான் மஸ்க்கின் ராக்கெட்
விண்ணில் பாய்ந்த எலான் மஸ்க்கின் ஃபால்கன் 9 ராக்கெட்

வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனி மண்டலத்தில் துளையை ஏற்படுத்திய எலான் மஸ்க்கின் ராக்கெட்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 25, 2023
10:59 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜூலை 19-ம் தேதி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட்டை விண்ணில் ஏவியது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். இந்த ராக்கெட்டானது மறுபயன்பாடு செய்யக்கூடிய வகையிலான இரு நிலைகளைக் கொண்ட ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனி மண்டலத்தில் (Ionosphere), இந்த ஃபால்கன் 9 ராக்கெட்டானது ஒரு சிறிய துளையை ஏற்படுத்தியிருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக, ஜெஃப் பவும்கார்ட்னர் என்ற இயற்பியலாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஏவல் புகைப்படங்களில் மெல்லிய சிவப்பு நிற ஒளி ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இந்த சிவப்பு நிற ஒளியை, ராக்கெட்டின் ஏவல் வீடியோக்களின் மூலம் ஆய்வு செய்து இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார் அவர்.

விண்வெளி

இதனால் என்ன பாதிப்பு? 

"ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஏவல் வீடியோவை ஆய்வு செய்தேன். மெல்லிய சிவப்பு நிற ஒளி தோன்றிய போது, அந்த ராக்கெட்டானது 286கிமீ உயரத்தில், அயனி மண்டலத்தின் F-பகுதியில் இருந்திருக்கிறது. எனவே, அயனி மண்டலத்தில் துளையை ஏற்படுத்தியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன" எனத் தெரிவித்திருக்கிறார். அயனிகள் எனப்படும் மின்னூட்டம் பெற்ற துகள்களால் ஆன அடுக்கே, அயனி மண்டலம் எனப்படுகிறது. பூமியின் வளிமண்டலம் முடிவுற்று, விண்வெளி தொடங்கும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்த அயனி மண்டலம். நாம் பூமியில் தொலைத்தொடர்பு மற்றும் வழிகாட்டிக்காகப் பயன்படுத்தும் ரேடியோ அலைகளை பிரபலிக்கும் மற்றும் மாற்றம் செய்யும் தன்மை கொண்டது, இந்த அயனி மண்டலம். இதில் ஏற்படும் பாதிப்பானது, பூமியில் நாம் பயன்படுத்தும் ஜிபிஎஸ் உள்ளிட்ட சேவைகளை பயன்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.