Loading...
"இணையத்தில் மனிதர்கள் மிகச் சிறிய பங்காக மாறுவார்கள்!" கிளவுட்ஃப்ளேர் அறிக்கையை உறுதி செய்த எலான் மஸ்க்
இணையத்தில் மனிதர்களை ஏஐ டிராஃபிக் மிஞ்சும் எலான் மஸ்க் திடுக்கிடும் கணிப்பு

"இணையத்தில் மனிதர்கள் மிகச் சிறிய பங்காக மாறுவார்கள்!" கிளவுட்ஃப்ளேர் அறிக்கையை உறுதி செய்த எலான் மஸ்க்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2026
01:37 pm

செய்தி முன்னோட்டம்

இணையத்தில் மனிதர்கள் உருவாக்கும் தகவல்கள் மற்றும் தேடல்களை விட, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏஜென்ட்கள் மற்றும் பாட்கள் உருவாக்கும் ஏஐ இன்டர்நெட் டிராஃபிக் பல மடங்கு அதிகரிக்கும் என எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்ஃப்ளேர் வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, "ஏஐ ஏஜென்ட்களின் இணையப் பயன்பாடு மனிதர்களின் பயன்பாட்டை விடப் பிரம்மாண்டமாக அதிகரிக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை." என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முறியடிப்பு

2026 மே மாதத்திலேயே முறியடிக்கப்பட்ட சாதனை

முன்னதாக, 2027 ஆம் ஆண்டில்தான் மனிதர்களின் இணைய டிராஃபிக்கை ஏஐ டிராஃபிக் முந்தும் என கிளவுட்ஃப்ளேர் நிறுவனம் கணித்திருந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக கடந்த 2026 மே மாதத்திலேயே எந்திரங்களால் உருவாக்கப்படும் இணைய செயல்பாடுகள் மனிதர்களின் நேரடி பயன்பாட்டை விட அதிகரித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மனிதர்களின் செயல்பாடுகள் குறையவில்லை என்றாலும், ஏஐ மற்றும் பாட்களின் தானியங்கி செயல்பாடுகள் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் வளர்ந்து வருவதே இதற்கு முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை

5 ஆண்டுகளில் 1000 மடங்கு உயரும் என கிளவுட்ஃப்ளேர் எச்சரிக்கை

கிளவுட்ஃப்ளேர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தாமஸ் சீஃபெர்ட் இது குறித்து பேசுகையில், தற்போதைய வளர்ச்சிப் போக்கு தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் மனிதர்கள் அல்லாத எந்திரங்களின் இணைய டிராஃபிக், மனிதர்களின் டிராஃபிக்கை விட 1,000 மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இதன் விளைவாக, இணைய உலகில் மனிதர்களின் பங்களிப்பு மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கும் என்றும், இணையம் முழுவதும் ஏஐ அமைப்புகளின் ஆதிக்கமே நிறைந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

மாற்றம்

எலான் மஸ்க்கின் ஆதரவும் எதிர்கால இணைய மாற்றங்களும்

தானியங்கி ஏஐ ஏஜென்ட்கள் இணையத்தில் தரவுகளை சேகரிப்பது, பகுப்பாய்வு செய்வது மற்றும் பணிகளை முடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கிளவுட்ஃப்ளேரின் இந்தக் கணிப்பு முற்றிலும் துல்லியமானது எனத் தெரிவித்துள்ள எலான் மஸ்க், எதிர்கால இணைய உலகம் மனிதர்களைத் தாண்டி ஏஐ அமைப்புகளால் தான் இயக்கப்படும் என்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் இணைய கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.

ADVERTISEMENT