உயர்ந்த 'உலகளாவிய சராசரி வெப்பம்'; வெப்பமான ஆண்டாகப் பதிவு செய்யப்படவிருக்கும் 2023
நவம்பர் 17ம் தேதியன்று, உலக வெப்பமயமாதலின் முக்கியமான அளவுகோளைக் கடந்திருக்கிறது பூமி. உலகம் முழுவதும் அதிகம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு முந்தைய காலக்கட்டத்தை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலக்கட்டம் எனக் குறிப்பிடுகின்றன. 1850 முதல் 1900 வரையிலான காலக்கட்டமே இந்த தொழில்மயமாதலுக்கு முன்பான காலக்கட்டமாகக் கருதப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தற்குப் பிறகு அதிகரித்த தொழிற்சாலைகளின் பயனாக பூமியின் வெப்பநிலை உயரத் தொடங்கி, கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெகு வேகமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 17ம் தேதியன்று உலகளாவிய சராசரி வெப்பநிலையானது, தொழில்மயமானதற்கு முன்பிருந்த உலகளாவிய சராசரி வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியஸ் அளவு முதன் முறையாகக் அதிகரித்திருக்கிறது.
உலகளாவிய சராசரி வெப்பம் என்றால் என்ன? அதனை எப்படிக் கணக்கிடுகிறார்கள்?
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு ஆய்வகங்களின் மூலம், நிலம் மற்றும் கடலின் காற்று வெப்பநிலை அளவிடப்படும். பின்னர் அளவிடப்பட்ட அனைத்து வெப்ப நிலையும் கூட்டப்படும், எத்தனை ஆய்வகங்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டதோ, அதனால் வகுக்கப்படும். அதன் மூலம் கிடைக்கும் முடிவே உளகளாவிய சாரசரி வெப்பநிலையாகக் குறித்துக் கொள்ளப்படும். இந்த அளவானது, உடனடியாக எந்தவொரு ஆய்வுக்கும் பயன்படாது. எனினும், கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பூமியின் எவ்வளவு வேகமாக வெப்பமயமாதலுக்கு உள்ளாகி வருகிறது என்பதனை நம்மால் கண்டறிய முடியும். இதனைக் கொண்டு காலநிலை மாற்றத்தின் வீரியத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். மேலும், பூமி வெப்பமயமாதலைத் தடுக்க நாமெடுக்கும் நடவடிக்கைகள் பலனளிக்கிறதா என்பனையும் இதனைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
உலகம் வெப்பமயமாவதால் என்ன பிரச்சினைகள் நேரும்?
பூமியின் வெப்பநிலை தொழில்மயமாதலுக்கு முன்பிருந்த வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்தாலே மனிதர்களால் தகவமைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு காலநிலை மாற்றங்கள் ஏற்படும் என எச்சரித்திருக்கின்றன உலகின் முக்கியமான காலநிலை அமைப்புகள். 2023ன் சராசரி வெப்பநிலையானது தொழில்மயமாதலுக்கு முன்பிருந்ததை விட 1.3 முதல் 1.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். இதற்கு முன்னதாக மிகவும் வெப்பமான ஆண்டாக அறியப்பட்ட 2016ம் ஆண்டை, 2023ம் ஆண்டு முந்தி மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவு செய்யப்படலாம் எனவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த நடப்பு காலக்கட்டமானது, கடந்த 1,25,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் வெப்பமான காலக்கட்டமாக இருக்கக்கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.