Page Loader
கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
புதிதாக உருவாகும் ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்

கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

எழுதியவர் Prasanna Venkatesh
May 15, 2023
03:50 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருந்தாலும், அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். அப்படி ஒரு புதிய துறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது ப்ராம்ப்ட் பொறியியல் (Prompt Engineering). கடந்த மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த AI ஸ்டார்ப்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக், ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கு வருடத்திற்கு 3,35,000 டாலர்களை சம்பளமாக அறிவித்திருந்தது அந்நிறுவனம். இந்திய மதிப்பில் இது ரூ.2.7 கோடி. ஆந்த்ரோபிக் மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்களும் இந்தப் புதிய வேலைக்காக பணியாளர்களை பணியமர்த்தி வருகின்றன. கடந்த சில மாதங்களில் AI தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து இந்த வேவைக்கான தேவையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு

ப்ராம்ட் இன்ஜினியரிங் என்றால் என்ன? 

AI சாட்பாட்களில் நாம் கொடுக்கும் உள்ளீடுகள் ப்ராம்ப்ட் என்படும். அந்த ப்ராம்ப்ட்-களி நிபுணத்துவம் பெற்றவரே ப்ராம்ப்ட் இன்ஜினியராகிறார். 'நாம் என்ன கேள்வி கேட்டாலும் சொல்லிவிடப் போகிறதே, இதில் என்ன நிபுணத்துவம்', எனத் தோன்றுகிறதா? சாட்பாட்களின் திறன் அவற்றின் தகவல்களில் இல்லை, அந்த தகவல்களை எப்படி கேட்பவர் வெளியே கொண்டுவருகிறார்கள் என்பதில் இருக்கிறது. ஒரு AI சாட்பாட் எதன் அடிப்படையில் இயங்குகிறது, அதனிடம் எந்தத் தகவலைப் பெற எப்படி உள்ளீடுகளை இடவேண்டும் என பல விஷயங்கள் இருக்கிறதாம். தற்போது இந்த ப்ராம்ப்ட் இன்ஜினியரிங்கைக் கற்றுக் கொடுக்க கோர்செரா உள்ளிட்ட ஆன்லைன் கற்றல் தளங்கள் புதிய பாடத்திட்டங்களைக் கொண்டு வந்து, அதில் பயனர்கள் சேர்ந்து இந்தப் புதிய துறை குறித்து கற்றுக் கொண்டும் வருகிறார்கள்.