ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்
இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக, மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக, புதிய திட்டம் வந்துவிட்டது. இத்தகைய ஆராய்ச்சி, ஏற்கனவே ஐரோப்பா,ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஆளில்லாத நீர்மூழ்கி கப்பல்கள் தான், ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தன. சில நாட்களுக்கு முன்னர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மனிதர்களை ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு அனுப்பும் முயற்சியாக 'சமுத்ராயன்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், 'மத்ஸ்யா 6000' என்ற ஆழ்கடல் வாகனம் மூலம், மூவரை கடலுக்கடியில் அனுப்பவிருப்பதாக, மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்கடல் ஆராய்ச்சியும் கடலுக்கடியில் இருக்கும் வளங்களும்
கடலுக்கடியில் இருக்கும் வளங்கள் குறித்தும், சரித்திர மிச்சங்கள் குறித்தும் ஆராய, இத்திட்டம் உபயோகப்படும். இந்த மத்ஸ்யா வாகனம், 6,000 மீட்டர் ஆழம் வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆழ்கடல் வாகனம், சென்னையைச் சேர்ந்த தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) மூலம் உருவாக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தின் பணிகள் நிறைவு பெறும். சோதனை ஓட்டத்திற்கு பிறகு, ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்தப்படும். வெற்றிகரமான செயல்பாட்டிற்கு பிறகு, எதிர்காலத்தில், இதை மக்கள் பயன்பாட்டிற்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் ஈடுபடுத்த இருப்பதாக, மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர், ஜிதேந்திர சிங், மேலும் தெரிவித்தார். வாகனத்தின் அதிகபட்ச ஆழ்கடல் செயல்பாடு, 96 மணி நேரம் எனக்கூறப்பட்டுள்ளது.