விண்வெளியில் பச்சை நிற ஜோம்பி நட்சத்திரம்! அறிவியல் புனைகதையை மிஞ்சிய புதிய கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
விண்வெளியில் பச்சை நிறத்தில் ஒளிரும் அபூர்வமான வெள்ளை குள்ள நட்சத்திரம் ஒன்றை வானியலாளர்கள் புதிதாகக் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 280 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்திற்கு WD J1330+6435 எனப் பெயரிடப்பட்டுள்ளது. மனிதக் கண்களுக்கு பச்சை நிறமாகத் தெரியும் முதல் நட்சத்திரம் இதுவாகும். வழக்கமான நட்சத்திரங்களின் நிறம் அவற்றின் வெப்பநிலையால் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த விண்மீனின் நிறம் அதன் வளிமண்டலத்தில் உள்ள தனிமங்களால் மாறுபட்டுள்ளது.
ஜோம்பி விண்மீன்
கோள்களின் இடிபாடுகளை விழுங்கி ஜோம்பியாக மாறிய விண்மீன்
அணுக்கரு எரிபொருள் தீர்ந்த பிறகு நட்சத்திரங்களின் எச்சங்களாக உருவாவதே வெள்ளை குள்ள நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரம் தன்னை சுற்றி அமைந்திருந்த பாறைக்கோள்களின் இடிபாடுகளைத் தன் மேற்பரப்பில் ஈர்த்து விழுங்கியுள்ளது.
இதனால் அதன் வெளிப்புற அடுக்கில் கால்சியம், லித்தியம் மற்றும் சோடியம் ஆகியவை பெருமளவில் சேர்ந்துள்ளன.
நட்சத்திரத்தின் அதிகப்படியான அடர்த்தி காரணமாக சோடியம் அணுக்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஒளிகளை உறிஞ்சிக் கொள்கின்றன.
இதனால் எஞ்சிய ஒளி பச்சை நிறமாகப் பிரதிபலிக்கிறது.
விண்வெளி அதிசயம்
அறிவியல் புனைகதைகளை மிஞ்சிய விண்வெளி அதிசயங்கள்
இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழுவினர் 151 வெள்ளை குள்ள நட்சத்திரங்களை ஆய்வு செய்து இக்கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.
வளிமண்டலத்தின் வேதியியல் அமைப்பைப் பொறுத்து நட்சத்திரங்களின் நிறங்கள் மாறுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக கார்பன் அதிகம் கொண்ட WD J1011+2845 என்ற நட்சத்திரம் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
பேரண்டத்தின் அதிசயங்கள் அறிவியல் புனைகதைகளை விட பிரம்மிப்பானவை என்பதை இந்த கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது.