செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய சுவையை உருவாக்கிய கோகோ கோலா
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான சாட்ஜிபிடியின் வரவுக்குப் பின்பு, அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும், அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் பலவும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்களுடைய குளிர்பானத்திற்கான 'Y3000' புதிய சுவை ஒன்றை உருவாக்கியிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ கோலா நிறுவனம். இந்தப் புதிய குளிர்பானச் சுவையை 'வரலாற்றிலிருந்து வந்த சுவை' என விளம்பரப்படுத்தி வருகிறது அந்நிறுவனம். வரலாற்றுச் சுவையை உணருங்கள் எனவும் இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவின் தயாரிப்பில் உருவான சுவை குறித்து தெரிவித்து வருகிறது கோகோ கோலா.
எப்படி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரித்தது?
தங்களுடைய குளிர்பானங்களைப் பருகும் வாடிக்கையாளர்களிடமிருந்து என்ன விதமான சுவையை அவர்கள் விரும்புகிறார்கள் என்பது குறித்த தகவல்களைப் ஆய்வு செய்து பெற்றிருக்கிறது கோகோ கோலா நிறுவனம். பின்பு அந்தத் தகவல்களை செயற்கை நுண்ணறிவுக் கருவியிடம் அளிக்க, அந்தத் தகவல்களைக் கொண்டு Y3000 என்ற புதிய சுவையை உருவாக்கித் தந்திருக்கிறது AI. மேலும், இந்தப் புதிய சுவையை அடைக்கும் புட்டியின் டிசைன் வடிவமைப்பிலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியிருக்கிறது கோகோ கோலா. புதிய சுவையை அறிமுகப்படுத்தியிருந்தாலும், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து இதனை விற்பனை செய்யும் திட்டம் கோகோ கோலாவிடம் இல்லை. எனவே, குறைந்த கால லிமிடட் எடிஷன் சுவையாகவே இதனை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.