அடுத்த வாரம் வெளியாகிறது 'சாட்ஜிபிடி'யின் ஆண்ட்ராய்டு செயலி
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட சாட்பாட்டை வெளியிட்டு இணையத்தையே அதிரவைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனம். முதலில் வலைத்தள வடிவில் மட்டுமே சாட்ஜிபிடியை பயனர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது ஓபன்ஏஐ. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம், ஆப்பிள் பயனர்களுக்காக சாட்ஜிபிடியின் ஐஓஎஸ் செயலியை வெளியிட்டது அந்நிறுவனம். ஐஓஎஸ் செயலியை வெளியிட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான செயலியை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஓபன்ஏஐ. அடுத்த வாரம், முதலில் அமெரிக்க பயனர்களுக்கும் அதனைத் தொடர்ந்து பிற நாட்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் சாட்ஜிபிடியை வெளியிடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதலே சாட்ஜிபிடியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு பிளேஸ்டோரில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பதிவிட்டிருக்கிறது ஓபன்ஏஐ.