நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ
கடந்த ஜூலை 14-ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திரயான் 3யை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது வரை பூமியின் சுற்றிவரும் சந்திரயான்-3யின் சுற்றுவட்டப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த ஜூலை 25-ம் தேதி, சந்தியான்-3யின் கடைசி சுற்றுவட்டப்பாதை உயர்த்து நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து தற்போது, நிலவை நோக்கிய பாதையில் வெற்றிகரமாக சந்தியான்-3யை செலுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது இஸ்ரோ. நள்ளிரவு 12 முதல் 1 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்குப் பிறகு, பூமியின் புவியீர்ப்பு விசையைக் கடந்து சந்திரனை நோக்கிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது சந்திரயான்-3. இந்த செயல்முறை வெற்றிகரமான முடிவடைந்தது குறித்து தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து தப்பிச் சென்ற சந்திரயான்-3 விண்கலமானது, ஆகஸ்ட் 5-ல் நிலவின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே, நிலவைச் சுற்றும் வகையிலான சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3யை செலுத்தும் பணியை இஸ்ரோ மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அதன் பின்பு, நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-3யின் சுற்றுவட்டப்பாதை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இறுதியாக இந்த மாதம் 23-ம் தேதி நிலவில் மென் தரையிறக்கத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இல்லாத பட்சத்தில், நிலவின் சந்திரயான்-3யின் தரையிறக்கம் அடுத்த மாதம் தள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.