புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம்
நிலவின் தென் துருவத்தில் ஆய்வினை மேற்கொள்ள சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று(ஜூலை.,20) பூமியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி விண்கலம், விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. நிலவில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலம் ரூ.615 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 25ம் தேதி 5ம் சுற்று பாதைக்கு உயர்த்தப்படும்
இந்நிலையில் அடுத்தடுத்த முயற்சிகளும் வெற்றியடையும் பட்சத்தில், முன்னதாக கூறியபடி வரும் ஆகஸ்ட் 1ம்தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இத்தகவல்கள் அனைத்தும் பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்கலம் மொத்தம் 5 நிலைகளில் செலுத்தப்படவேண்டிய நிலையில், 5ம் சுற்று பாதைக்கு உயர்த்தும் பணியானது வரும் ஜூலை 25ம் தேதி பிற்பகல் 2ல் இருந்து 3 மணிக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். கடந்த 17ம் தேதி 2வது சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்ட விண்கலம், அதன் தொடர்ச்சியாக கடந்த 18ம் தேதி 3ம் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது. தற்போது வெற்றிகரமாக 4ம் சுற்றுப்பாதைக்குள்ளும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.