அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் அறிவுரை
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதியன்று சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது இந்தியாவின் சந்திரயான் 3. இத்திட்டத்தின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு தேவையான தகவல்களை சேகரித்தன விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும். இந்நிலையில் இத்திட்டத்தில் பணியாற்றிய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உட்பட ஒன்பது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை ஒருங்கிணைத்தது தமிழக அரசு. அப்போது பேசிய வீரமுத்துவேல், "நிலவில் மென் தரையிறக்கத்தை வெற்றிகரமாக சாத்தியப்படுத்திய நாடுகளுள் ஒன்றாகியிருக்கிறது இந்தியா. நிலவில் பல்வேறு அறிவியல் சோதனைகளை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறோம். நிலவின் தென்துருவப் பகுதியில் ரோவரை 100மீ வரை வெற்றிகரமாக நகர்த்தியிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
சந்திரயான் 3யுடனான தொடர்பை இழந்த இஸ்ரோ:
திட்டமிட்டபடி 14 நாட்களுக்கு செயல்பட்ட பின், நிலவின் இருளில் தூங்கச் சென்ற விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும் பின்பு விழித்தெழவே இல்லை. இது முன்பே கணிக்கப்பட்டது தான். எனினும், மீண்டும் இயங்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டது இஸ்ரோ. இது குறித்து பேசும் போது, "நிலவின் தென்துருவப் பகுதியில் வெப்பம் குறைவாகவே இருக்கும். மைனஸ் 150 முதல் 175 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் சூரிய ஒளியை வைத்து சாதனங்களை இயக்குவது கடினம்" எனத் தெரிவித்தார் அவர். "எந்தப் பள்ளியில் படித்தாலும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் வேண்டும். நான் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். அரசுப் பள்ளியில் படிப்பவர்களாலும் எந்த நிலையையும் அடைய முடியும்." என மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பேசினார் அவர்.