LOADING...
அமெரிக்காவில் இந்தியாவிற்குப் பெருமை! இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்திற்கு உயரிய சர்வதேச விருது! வினய் குவாத்ரா பெற்றார்
அமெரிக்காவின் புகழ்பெற்ற 2026 கோடார்ட் விண்வெளி விருது இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டது

அமெரிக்காவில் இந்தியாவிற்குப் பெருமை! இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்திற்கு உயரிய சர்வதேச விருது! வினய் குவாத்ரா பெற்றார்

எழுதியவர் Sekar Chinnappan
May 22, 2026
02:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம், விண்வெளித்துறையில் உலகளவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 2026 கோடார்ட் விண்வெளி விருதை (Goddard Astronautics Award) வென்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற மாநாட்டில் இந்த விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் முதல் முறையாக வெற்றிகரமாகத் தரையிறங்கி, உலக விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியதற்காக இஸ்ரோவுக்கு இந்த சர்வதேச கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் வினய் குவாத்ரா இந்த விருதை இஸ்ரோவின் சார்பில் நேரில் பெற்றுக்கொண்டார்.

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்

சவால்களை முறியடித்து நிலவின் தென்துருவத்தை வென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்

கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் தரைப்பகுதியை நெருங்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு சந்திரயான்-3 உருவாக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம்3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடினமான விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, நிலவின் தென்துருவத்திற்கு அருகில் விக்ரம் லேண்டர் துல்லியமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலத்தைச் செலுத்திய உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் மென்மையாகத் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற வரலாற்றுச் சாதனையையும் இந்தியா பெற்றது. இதிலிருந்த பிரக்யான் ரோவர் நிலவின் மண், வெப்பநிலை மற்றும் நில அதிர்வு போன்ற பல முக்கியத் தரவுகளைச் சேகரித்து அனுப்பியது.

குறைந்த பட்ஜெட்

குறைந்த பட்ஜெட்டில் உலகையே வியக்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் அசாத்திய உழைப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் இந்த பிரம்மாண்டமான வெற்றிக்குக் பின்னால் இஸ்ரோவின் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பல ஆண்டுகால உழைப்பு அடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் முழுமையான செயல்பாடுகளை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் தலைமையிலான குழுவினர் மிகச் சிறப்பாக வழிநடத்தினர். உலக விண்வெளி அமைப்புகளை வியக்க வைத்த மற்றொரு முக்கிய விஷயம் இந்த விண்கலத்தின் மிகக் குறைந்த பட்ஜெட் ஆகும். வெறும் 615 கோடி ரூபாய் செலவில் இந்த இமாலய சாதனையை இஸ்ரோ நிகழ்த்திக் காட்டியுள்ளது, திறமையான பொறியியல் மற்றும் முறையான திட்டமிடலுக்குச் சிறந்த உதாரணமாக உலக அரங்கில் பேசப்படுகிறது.

Advertisement

உலகளவில் இந்தியாவின் ஆதிக்கம்

உலகளவில் இந்தியாவின் விண்வெளி ஆதிக்கத்தை நிலைநிறுத்திய கோடார்ட் விருது

அமெரிக்க வானூர்தி மற்றும் விண்வெளி நிறுவனத்தால் (AIAA) வழங்கப்படும் இந்த கோடார்ட் விண்வெளி விருது என்பது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கும் திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும். சந்திரயான் 3 விண்கலத்தின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சிக்கு அது வழங்கிய பங்களிப்பு ஆகியவற்றிற்காக இந்த விருது தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சர்வதேச அங்கீகாரம் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் பலத்தையும், இஸ்ரோவின் அசைக்க முடியாத ஆதிக்கத்தையும் மீண்டும் ஒருமுறை கம்பீரமாக நிரூபித்துள்ளது.

Advertisement