LOADING...
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறது: அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறது: அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 06, 2026
11:22 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தலைவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், "முதலமைச்சர் விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதியின்படி, மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நிர்வாக மற்றும் நிதி சார்ந்த வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த உயர்வு திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும், அதுவரை பொதுமக்கள் சிறிது காலம் பொறுமையுடன் இருக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மறுபரிசீலனை

நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மறுபரிசீலனை

முந்தைய ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து, இதுவரை உதவித்தொகை கிடைக்க பெறாத தகுதியுடைய பெண்களுக்கு தற்பொழுது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நபரின் பெயரில் 2 அல்லது 3 முறை விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ள குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றைச் சரிசெய்து தகுதியுடைய அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் புதிய வெளிப்படையான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட வாரியாக தரவுகள் சேகரிக்கப்பட்டு, பயனாளிகள் சரிபார்ப்புப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement