எச்சரிக்கை! 21, 61, 67 எனத் தொடங்கும் எண்களை டயல் செய்யாதீர்கள்; உங்கள் வங்கி கணக்கு காலியாகலாம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மொபைல் பயனர்களை குறிவைத்து 'கால் பார்வர்டிங்' (Call Forwarding) எனும் புதிய வகை சைபர் மோசடி வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த மோசடி சமூக பொறியியலை அடிப்படையாகக் கொண்டது மற்றும் USSD குறியீடுகள் குறித்து மக்களுக்குப் பரிச்சயம் இல்லாததைப் பயன்படுத்திக் கொள்கிறது.
மோசடி
மோசடி நடப்பது எப்படி?
மோசடி நபர்கள் தங்களை வங்கி அதிகாரிகள், கொரியர் நிறுவன ஊழியர்கள் அல்லது டெலிவரி ஏஜென்ட்கள் போல அடையாளப்படுத்திக் கொண்டு உங்களுக்கு அழைப்பார்கள். உங்கள் பார்சல் வந்துள்ளது அல்லது உங்கள் கணக்கில் ஏதோ சிக்கல் உள்ளது, அதைச் சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட எண்ணை டயல் செய்யுமாறு கூறுவார்கள். அவர்கள் உங்களை 21, 61, அல்லது 67 எனத்தொடங்கும் மொபைல் எண்ணை டயல் செய்ய சொல்வார்கள். நீங்கள் அந்த எண்ணை டயல் செய்தவுடன், உங்கள் போனுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் மோசடி நபர்களின் எண்ணிற்கு திசைதிருப்பப்படும்(Call forwarding) இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கின் OTP அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப், டெலிகிராம் அழைப்புகள் அவர்களுக்கு செல்லும். இதை வைத்து உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை திருடுவார்கள்.
தற்காப்பு
தற்காத்துக் கொள்வது எப்படி?
அறிமுகமில்லாத நபர்கள் கூறும் எந்தவொரு USSD குறியீடுகளையும் (குறிப்பாக 21, 61, 67 போன்றவற்றை) உங்கள் மொபைலில் டயல் செய்யாதீர்கள். உங்கள் போனில் ஏற்கனவே கால் பார்வர்டிங் ஆகி உள்ளதா எனச் சோதிக்கவும், தவறுதலாக ஆகி இருந்தால் அதை ரத்து செய்யவும் ##002# என்ற எண்ணை டயல் செய்யுங்கள். வங்கிகளோ அல்லது கொரியர் நிறுவனங்களோ இது போன்ற குறியீடுகளை டயல் செய்யச் சொல்லி ஒருபோதும் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இது போன்ற மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது 'www.cybercrime.gov.in' என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.