LOADING...
மொபைல்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம்: மத்திய அரசின் புதிய உத்தரவு
மொபைல்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம்

மொபைல்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம்: மத்திய அரசின் புதிய உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 02, 2025
08:48 am

செய்தி முன்னோட்டம்

தொலைத்தொடர்பு துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. மொபைல்களை தொலைத்தொடர்புத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்துவதையும், போலியான IMEI எண் மோசடிகளை தடுப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்ய அறிவுறுத்தல்

புதிய மொபைல்களை முதல் முறை பயன்படுத்தும்போதே இந்தச் செயலி தெளிவாகத் தெரிய வேண்டும் என்றும், அதன் எந்த அம்சத்தையும் மறைக்கவோ, முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடாது என்றும் உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அலைபேசி நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பயன்பாடுகள்

சஞ்சார் சாத்தி செயலியின் பயன்பாடுகள்

குடிமக்களை மையமாகக் கொண்ட இந்த செயலியின் மூலம், பயனர்கள் பின்வரும் விவரங்களை அறிந்து மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்: 1. IMEI எண்ணைப் பயன்படுத்தி அலைபேசியின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்தல். 2. திருடப்பட்ட அல்லது தொலைந்துபோன அலைபேசிகளைப் புகார் அளித்தல். 3. தங்கள் பெயரில் எத்தனை மொபைல் இணைப்புகள் உள்ளன என்பதைச் சரிபார்த்தல். 4. சந்தேகத்திற்கிடமான மோசடி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளைப் புகாரளித்தல்.

Advertisement

எதிர்ப்பு

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், தனிநபர் தனியுரிமை மீறல் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. "முன்கூட்டியே நிறுவப்பட்டு, நீக்க முடியாத வகையிலுள்ள ஒரு அரசு செயலி, ஒவ்வொரு இந்தியரையும் கண்காணிக்கும் ஒரு சர்வாதிகார கருவியாகும். இது அரசியல் சாசனத்தின் 21வது பிரிவின் கீழ் உள்ள வாழ்வுரிமையின் ஓர் அங்கமான தனியுரிமைக்கு எதிரானது," என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement