சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்குத் திரும்பிய போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம்
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) விடுவிக்கப்பட்டு பூமிக்குத் திரும்பியது. தொழில்நுட்ப சிக்கல்களால் விண்கலம் நீண்ட நாட்கள் தாமதத்திற்குப் பிறகு, அதில் பயணித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் பூமிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஜூன் மாதத்தில் ஸ்டார்லைனரில் இருவரும் எட்டு நாட்கள் பயணமாக விண்வெளிக்குச் சென்றனர். இதன் மூலம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணித்த முதல் இருவர் என்ற பெருமையையும் அவர்கள் பெற்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், இருவரும் விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஸ்டார்லைனர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாத நாசா, இருவரையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் விட்டுவிட்டு ஸ்டார்லைனர் விண்கலத்தை மட்டும் தற்போது பத்திரமாக பூமிக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 2025 பிப்ரவரி வரை சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருப்பார்கள் எனத் தெரிவித்துள்ள நாசா, அவர்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் அப்போது பூமிக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. 2019இல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பிய திட்டம் தோல்வியைத் தழுவிய பிறகு, அந்நிறுவனத்தால் அதிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை. இதற்கிடையே, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற மலிவான செயற்கைக்கோள் ஏவும் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளன.