ஜியோ சினிமா தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் BGIS 2023 ஆன்லைன் விளையாட்டுத் தொடர்
2023ம் ஆண்டிற்கான பேட்டில்கிரவுண்டு மொபைல் இந்தியா சீரிஸ் (BGIS 2023) இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. ஆகஸ்ட் 31ல் ஆன்லைன் தகுதிச்சுற்றுடன் தொடங்கி, அக்டோபர் 14ல் இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு BGSI 2023 e-ஸ்போர்ட்ஸ் தொடரை, ஜியோசினிமா ஓடிடி தளத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது கிராஃப்டான் இந்தியா நிறுவனம். இதுவரை விளையாட்டுப் போட்டிகள் மட்டுமே ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த நிலையில், தற்போது ஆன்லைன் விளையாட்டுத் தொடரான BGIS-ம் ஓடிடி தளமொன்றில் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. 2,000 அணிகள் போட்டியிடவிருக்கும் இந்தத் தொடரில், வெற்றிபெரும் அணிகளுக்கு ரூ.75 லட்சம் பரிசாக வழங்கப்படவிருக்கிறது.
இந்தியாவின் பெரிய இ-ஸ்போர்ட்ஸ் தொடர்:
இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் குறித்து தொடரின் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும், அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கவும் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், கிராஃப்டான் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான சான் ஹ்யூனில் சோ. ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டுத் தொடரில், கடந்தாண்டு வெற்றி பெற்ற ஸ்கைலைட்ஸ் கேமிங் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு வரை பப்ஜி மொபைல் இந்தியா சீரிஸ் என்ற பெயரில் இந்த ஆன்லைன் விளையாட்டுப் போட்டித் தொடர் நடத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டது BGMI அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, BGIS என்ற பெயரில் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் வர்ணனையுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.