Loading...
1TB வாடிக்கையாளர் தரவு கசிவு! பேங்க் ஆஃப் பரோடா ஹேக் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்; முழு விபரம்
பேங்க் ஆஃப் பரோடா ஹேக் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

1TB வாடிக்கையாளர் தரவு கசிவு! பேங்க் ஆஃப் பரோடா ஹேக் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 27, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கணினி அமைப்புகள் ஹேக் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களின் 1 டிபி அளவிலான ரகசியத் தரவுகள் டார்க் வெப் தளங்களில் இலவசமாக கசியவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தரவுக் கசிவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்கள், ஆதார் எண்கள், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குத் தகவல்கள், நெட்பேங்கிங் விவரங்கள் மற்றும் கடன் தொடர்பான மிக முக்கியமான ஆவணங்கள் அடங்கியுள்ளதாக இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு எச்சரித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

உறுதிப்படுத்தல்

இணைய பாதுகாப்பு நிபுணரின் ஆய்வு மற்றும் உறுதிப்படுத்தல்

கேஷ்லெஸ் கன்ஸ்யூமர் அமைப்பின் நிறுவனரும் சாஃப்ட்வேர் பொறியாளருமான ஸ்ரீகாந்த் லட்சுமணன், இந்தத் தரவுக் கசிவை முதன்முதலில் ஆய்வு செய்து எக்ஸ் தளத்தில் ஆதார படங்களைப் பகிர்ந்துள்ளார்.

டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ள மாதிரிகளை சரிபார்த்தபோது, அதில் பேங்க் ஆஃப் பரோடாவின் உள் தணிக்கை அறிக்கைகள், பாப் வேர்ல்ட் (bobWorld) தணிக்கை ஆவணங்கள், வங்கியின் உள்நோக்க விசாரணை அறிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விண்ணப்பப் படிவங்கள் ஆகியவை உண்மையாகவே இடம்பெற்றுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதனை ஒரு மிகப்பெரிய சைபர் பேரழிவு என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Embed

ADVERTISEMENT

பின்னணி

'ட்ரிப்பிள் எக்ஸ்' ஹேக்கிங் குழுவின் பின்னணி

இந்தத் தாக்குதலுக்கு ட்ரிப்பிள் எக்ஸ் என்ற புதுவகை ஹேக்கர் குழுவே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இக்குழுவினர் ஏற்கனவே கடந்த மே மாதத்தில் இந்தோனேசியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பிடி பேங்க் நெகாரா இந்தோனேசியா வங்கியின் அமைப்புகளை ஹேக் செய்து, சுமார் 2 டிபி அளவிலான வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஒப்பந்த ஆவணங்களைத் திருடி இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.

அதே பாணியில் தற்போது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 1 டிபி அளவிலான முழுத் தரவுகளையும் டோர் இணையதள பக்கத்தில் இலவசமாக வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தற்போதைய நிலை

அதிகாரப்பூர்வ விளக்கம் குறித்த தற்போதைய நிலை

இந்த மிகப்பெரிய சைபர் தாக்குதல் மற்றும் தரவுக் கசிவு குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பேங்க் ஆஃப் பரோடா வங்கி நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் பொதுவெளியில் வெளியிடவில்லை.

மேலும், இந்திய கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழு (CERT-In) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் தரப்பிலும் இந்த சம்பவம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும், வங்கித் துறையில் அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள் காரணமாக நிதி அமைச்சகம் அனைத்து வங்கிகளுக்கும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பலப்படுத்துமாறு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர் பாதுகாப்பு

வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள்

வங்கித் தரவுகள் டார்க் வெப்பில் கசியவிடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால், பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தங்களது நெட்பேங்கிங் கடவுச்சொற்கள் மற்றும் பின் எண்களை உடனடியாக மாற்றுமாறு இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், தேவையற்ற குறுஞ்செய்திகள், சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் இணைப்புகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் வரும் போலி கோரிக்கைகளை நம்பி ஆதார் அல்லது வங்கித் தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும், கணக்கில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT