அடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?
அடுத்த பத்தாண்டுகளில் பல நவீன விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள். மேற்கூறிய அனைத்து நாடுகளும் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. அதிலும் அமெரிக்கா அடுத்த பத்தாண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், பூமி எனும் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பயணிக்கும் போது மனிதர்கள் சந்திக்கவிருக்கும் ஆபத்துக்கள் குறிந்து நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. 28, அக்டோபர் 2021, சூரியினில் இருந்து வெளிப்பட்ட Coronla Mass Ejection எனப்படும் வெடிப்பானது நிலவு, பூமி மற்றும் செவ்வாய் என அனைத்து இடங்களிலும் உணரப்பட்டிருக்கிறது. இது போன்ற கதிர்வீச்சு நிறைந்த சூரிய வெடிப்புகளிலிருந்து பூமியின் வலிமண்டலமும், காந்தப் புலமும் நம்மைக் காத்துவிடும். ஆனால், விண்வெளியில்?
கதிர்வீச்சு பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கின்றனரா விண்வெளி வீரர்கள்?
2021 அக்டோபரில் ஏற்பட்ட அந்த சூரிய வெடிப்பை நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த நாசாவின் லூனார் ஆர்பிட்டர் முதல் செவ்வாயைச் சுற்றி வந்து கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் எக்ஸோமார்ஸ் ஆர்பிட்டர் மற்றும் செவ்வாயில் தரையிறக்கப்பட்ட க்யூரியாசிட்டி ரோவர் வரை அனைத்து ஆய்வு கலன்களும் பதிவு செய்திருக்கின்றன. இந்த ஆய்வுக் கலன்கள் பதிவு செய்து கதிர்வீச்சு அளவுகள், அடுத்து வருங்காலத்தில் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியின் கதிர்வீச்சு அபாயத்தைக் கண்டறியும் வகையில் புதிய கருவிகளையும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் புதிய வசதிகளையும் வருங்கால விண்வெளி வீரர்களுக்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கடந்த கால அனுபவங்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன.