ஆப்பிளின் WWDC 2026: வந்துவிட்டது iOS 27 மற்றும் முற்றிலும் புதிய 'Siri AI'
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடான WWDC 2026 நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு (AI) உலகையே உலுக்கும் வகையிலான பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் உறுதியளித்து வந்த 'ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்' (Apple Intelligence) தொழில்நுட்பம், தற்போது ஐபோன், மேக் கணினிகள் மற்றும் ஐபேட்களில் முழுமையான வடிவத்தைப் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் சிஇஓ டிம் குக் முன்னிலையில் வெளியிடப்பட்ட டாப் 5 முக்கிய AI அம்சங்கள் இதோ:
சிரி
முற்றிலும் புதிய 'Siri AI'
ஆப்பிளின் குரல் உதவியாளரான 'சிரி' (Siri), முற்றிலும் புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மாடல்கள் மூலம் முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இனி சிரியிடம் மனிதர்களுடன் பேசுவதைப் போல மிக இயல்பாகத் தொடர்ந்து பேச முடியும். உங்கள் முந்தைய கேள்விகளின் சூழலை நினைவில் வைத்துக்கொண்டு இது பதிலளிக்கும். உங்கள் மொபைல் திரையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப உதவிகளைச் செய்யும் (உதாரணமாக, ஒரு மெசேஜில் இருக்கும் முகவரியை எடுத்து மேப்ஸிற்குள் தானாக அனுப்பும்). சிரியுடன் நீங்கள் நடத்திய முந்தைய உரையாடல்களைப் பார்ப்பதற்கெனத் தனியாக ஒரு 'Siri App' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் விஷன் ப்ரோ ஹெட்செட்களிலும் வேலை செய்யும்.
iOS 27
AI பலத்துடன் களமிறங்கும் iOS 27
ஐபோன்களுக்கான அடுத்த தலைமுறை மென்பொருளான iOS 27 அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிரியின் செயல்பாடுகள் மற்றும் பதில்கள் அனைத்தும் இனி டைனமிக் ஐலாண்ட் வழியாகவே கண்கவர் அனிமேஷன்களுடன் தோன்றும். கேமராவைத் திறந்து ஏதேனும் ஒரு பொருளைக் காட்டினால், அது என்ன பொருள், அதன் விபரம் என்ன என்பதை சிரி உடனடியாகத் தேடிக் கூறும். iOS 26-ல் அறிமுகமான 'லிக்விட் கிளாஸ்' வடிவமைப்பின் அடர்த்தியைக் குறைத்துக்கொள்ளும் 'ஒபாசிட்டி கண்ட்ரோல்' வசதி இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய iOS 27 அப்டேட், ஐபோன் 11 மற்றும் அதற்குப் பிறகு வந்த அனைத்து ஐபோன் மாடல்களுக்கும் கிடைக்கும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
macOS 27
மேக் கம்ப்யூட்டர்களுக்கான macOS 27 'Golden Gate'
மேக் கணினிகளுக்கான புதிய ஓஎஸ்-க்கு 'மேக்ஓஎஸ் கோல்டன் கேட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேக் கம்ப்யூட்டரின் தேடுபொறியான ஸ்பாட்லைட்டிற்குள் 'சிரி' நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் கோப்புகளைத் தொகுத்துக் கொடுப்பது, மின்னஞ்சல்களைச் சுருக்கித் தருவது போன்ற வேலைகளை இது நொடியில் செய்யும். வண்ணமயமான சைட்பார் ஐகான்களும் இதில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன.
சஃபாரி
சஃபாரி பிரவுசரில் AI மாற்றங்கள்
ஆப்பிளின் சொந்த சபாரி பிரவுசர் முற்றிலும் புதிய எம்படட் AI வசதிகளை பெற்றுள்ளது. நீங்கள் திறந்து வைத்துள்ள பல டேப்களை, அவற்றின் தலைப்பு மற்றும் தலைப்புகளின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப AI-யே தானாகத் தனித்தனி பிரிவுகளாக வகைப்படுத்தும். ஏதேனும் ஒரு இ-காமர்ஸ் தளத்தில் ஒரு தயாரிப்பு மீண்டும் விற்பனைக்கு வரும்போதோ அல்லது இணையப் பக்கங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்போதோ, சபாரி உங்களுக்குத் தானாக அலர்ட் கொடுக்கும். திருடப்பட்ட அல்லது ஹேக் செய்யப்பட்ட பாஸ்வேர்டுகளை AI மூலம் தானாகவே மாற்றிப் புதுப்பிக்கும் பாதுகாப்பு அம்சம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்
ஆப்களுக்கான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்
தினசரி பயன்படுத்தும் ஆப்களிலும் AI புகுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒருவருடன் சேட் செய்யும்போது, அந்த உரையாடலுக்குப் பொருத்தமான புகைப்படங்களை ஆப் தானாகவே பரிந்துரைக்கும். ஒரு போன் கால் வரும்போது, பழைய மெயில்களில் இருக்கும் உங்களின் விமான டிக்கெட் அல்லது ஹோட்டல் கன்பர்மேஷன் விபரங்களை டிஸ்பிளேயில் தானாகவே கொண்டுவந்து காட்டும். புகைப்படங்களில் உள்ள தேவையில்லாத பொருட்களை நீக்கும் 'க்ளீன்அப்' வசதி மற்றும் போட்டோவின் ஃபிரேமைத் தாண்டி பட விரிவாக்கம் செய்யும் 'எக்ஸ்டெண்ட்' போன்ற மேம்பட்ட எடிட்டிங் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மற்றும் சிரி AI அம்சங்களின் பீட்டா பதிப்புகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பயனர்களுக்குப் படிப்படியாக கிடைக்கத் தொடங்கும்.