விலை குறைவான AR/VR ஹெட்செட்டை உருவாக்கி வரும் ஆப்பிள்!
கடந்த வாரம் தங்களுடைய WWDC 2023 நிகழ்வை நடத்தி முடித்தது ஆப்பிள். இந்த நிகழ்வில் தான் டெக் உலகமே பெரிதும் எதிர்பார்த்திருந்த தங்களது முதல் AR/VR ஹெட்செட்டான 'விஷன் ப்ரோ' அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.88 லட்சம் விலையில் வெளியான இந்த விஷன் ப்ரோவானது விரைவில் விற்பனைக்கு வரும் என்றாலும், அனைவரும் வாங்கக் கூடிய விலையில் அது இல்லை. எனவே, விஷன் ப்ரோவைவிட குறைந்த விலையில் புதிய AR/VR ஹெட்செட் ஒன்றை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஆப்பிள். ஆனால், இந்த ஹெட்செட்டை தற்போதைக்கு வெளியிடும் திட்டத்தில் அந்நிறுவனம் இல்லை. விலை குறைவான ஆப்பிளின் AR/VR ஹெட்செட்டானது 2025-லேயே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் விஷன் ஒன்:
இந்த விலை குறைவான ஹெட்செட்டிற்கு விஷன் ஒன் என்ற பெயரை ஆப்பிள் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைவான ஹெட்செட்டுடன், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் விஷன் ப்ரோவின் அடுத்த தலைமுறை ஹெட்செட் மாடலையும் அந்நிறுவனம் தற்போது மேம்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விலை குறைவான ஹெட்செட் என்பதால் பெரிய அளவிலான மாற்றங்களை இந்த ப்ரீமியம் விஷன் ப்ரோவில் இருந்து நாம் எதிர்பார்க்க முடியும். குறைந்த தரத்துடன் கூடிய மெட்டீரியல்கள், ஹெட்பேண்டு, ஆடியோ சிஸ்டம் நீக்கம் உள்ளிட்ட வசதிகளை ஆப்பிள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை மாற்றங்களையும் கடந்தும் ரூ.1.5 லட்சத்திற்குளேயே இந்த புதிய ஹெட்செட்டை ஆப்பிள் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கும் கீழே விலை குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவு.