
புதிய ஐபோன்கள் அதிக வெப்பமடைவதைத் தடுக்கு ஆப்பிளின் புதிய திட்டம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் தங்களுடை புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள்.
நான்கு மாடல்களாக வெளியிடப்பட்ட ஐபோன் 15 சீரிஸின் ப்ரோ மாடல்கள், அதிகம் சூடாவதாக ஆப்பிள் வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் புகார் எழுப்பத் தொடங்கினர்.
ஆப்பிள் ஐபோன்கள் அவ்வப்போது சூடாகும் தான் என்றாலும், புதிய ஐபோன் சீரிஸில் அந்தப் பிரச்சினை மிகவும் மோசமாக இருந்ததைத் தொடர்ந்து, மென்பொருள் அப்டேட் மூலம் அதனை சரிசெய்தது ஆப்பிள்.
இந்நிலையில், அடுத்து உருவாக்கும் ஐபோன்களுக்கு புதிய வகையிலான வெப்பக் கடத்திகளைப் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்திருக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிளின் புதிய திட்டம்:
ஆப்பிளின் தற்போதைய ஃப்ளாக்ஷிப்பான 15 சீரிஸில் மாடல்களில் வெப்பக் கடத்தலுக்கு செம்பு (Copper) உலோகத்தையே பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
ஆனால், அடுத்ததா உருவாகி வரும் ஐபோன் 16 மாடலில் இதற்குப் பதிலாக கிராஃபீன் என்றொரு பொருளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள். செம்பை விட சிறந்த வெப்பக் கடத்தியாக இது செயல்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்களின் பேட்டரி கேசிங்கிற்கு இதுவரை பிளாக் ஃபாயிலையே அந்நிறுவனம் பயன்படுத்தி வந்த நிலையில், அதிக வெப்பமடைதலைத் தடுக்கும் பொருட்டு இனி மெட்டல் கேசிங்கை ஆப்பிள் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.