வேவு பார்க்கப்படும் அரசியல்வாதிகளின் ஐபோன்கள்.. ஆபத்பாந்தவனாக உதவும் ஐபோனின் 'லாக்டவுன் மோடு'
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய ஐபோனை ஹேக் செய்து தகவல்களைத் திருட அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் முயற்சிப்பதாக எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் புகார் தெரிவித்து பதிவுகள் இட்டு வருகிறார்கள்.
ஒருவருடைய ஐபோன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா அல்லது ஹேக் செய்ய முயற்சி செய்து வருகிறார்களா என்பது குறித்த எச்சரிக்கைகளை ஆப்பிள் நிறுவனமே தங்களுடைய பயனாளர்களுக்கு அனுப்பும்.
ஆப்பிள் சாதனங்களின் பிரதான வசதியே அதன் தகவல் பாதுகாப்பு தான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் போல ஐபோன்களை அவ்வளவு எளிதில் ஹேக் செய்ய முடியாது என்ற காரணத்தினால் தான் பெரும்பாலான பெரும்புள்ளிகள் ஐபோன்களையே உபயோகிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டும் ஆப்பிள் நிறுவனம் அவர்களது மொபைலுக்கு அனுப்பிய எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்ட அமைந்திருக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை:
தங்களது வாடிக்கையாளர்களின் ஐபோனை ஹேக் செய்ய முயற்சிப்பது தெரிய வந்தால், அவர்களுடைய ஆப்பிள் ஐடியின் உதவியுடன் அந்தத் தகவலை அவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து எச்சரிக்கை செய்யும்.
இந்த எச்சரிக்கையானது, நோட்டிபிகேஷன் வடிவிலோ, ஐமெஸேஜ் அல்லது குறுஞ்செய்தி வடிவிலோ இருக்கும். பயனாளர்கள் ஆப்பிள் ஐடியில் அளித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இது அனுப்பப்படுகிறது.
மேலும், இது போன்ற சூழ்நிலைகளில் பயனாளர்கள் தங்களுடைய மொபைலில் உள்ள தகவல்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு வசதியையும் தங்களுடைய சாதனத்தில் அளித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
ஆம், இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் பயனாளர்கள் தங்களுடைய போனில் இருக்கும் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் பார்த்தக் கொள்ள ஆப்பிள் சாதனத்தில் வழங்கப்பட்டிருக்கும் 'லாக்டவுன் மோடை'ப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐபோன்
ஆப்பிள் ஐபோனின் 'லாக்டவுன் மோடு':
இந்த லாக்டவுன் மோடில், ஒரு ஹேக்கர் எந்தெந்த வகையில் எல்லாம் தகவல்களை திருடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்களோ அந்த வழிகளை எல்லாம் ஆப்பிள் சாதனத்தில் அடைக்கப்பட்டு விடும்.
லாக்டவுன் மோடில் குறுஞ்செய்தியுடன் வரும் லிங்க்குகள் மற்றும் அட்டாச்மெண்ட்கள் டிஸ்ஏபிள் செய்யப்படும், நமக்கு தெரியாத நபர்களிடமிருந்த வரும் ஃபேஸ்டைம் கால்கள் பிளாக் செய்யப்படும், தெரியாத வைபை நெட்வொர்க்குடன் ஆப்பிள் சாதனம் இணையாது மற்றும் குறிப்பிட்ட வெப் ப்ரௌஸிங் தொழில்நுட்பங்கள் செயலிழக்கப்படும்.
லாக்டவுன் மோடின் போது, சாதாரண போன் கால்கள், அடிப்படைய டெக்ஸ்ட் குறுஞ்செய்தி மற்றும் அவசரகால சேவை ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த முடியும்.
இந்த வசதியின் மூலம் பயனாளர்களின் தகவல் பாதுகாப்பை உறுதி செய்கிறது ஆப்பிள். செட்டிங்ஸின் தனியுரிமைப் பக்கத்தில் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.