புதிய 'ஜர்னலிங்' செயலியை உருவாக்கி வரும் ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் புதிய ஜர்னலிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சமீப காலமாக பயனர்களின் உடல் மற்றும் மனநலன் சார்ந்த சேவைகளை மேம்படுத்துவதிலும் வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது ஆப்பிள். அதன் ஒரு பகுதியாகவே மேற்கூறிய ஜர்னலிங் செயலியையும் அந்நிறுவனம் மேம்படுத்தி வருவதாகத் தெரிகிறது. நமது தினசரி நடவடிக்கைகளை தினமும் ஒரு குறிப்பேட்டில் தொடர்ந்து குறித்து வருவதையே ஜர்னலிங் எனக் கூறுவோம். முன்னர் நமது கைப்பட ஒரு டைரியில் தினமும் நமது நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பெழுதி வந்த நிலையில், தற்போது அதற்காக மொபைலைப் பயன்படுத்துகிறோம். ஆப் ஸ்டோரில் பல மூன்றாம் தர ஜர்னலிங் செயலிகள் இருக்கின்றன. தற்போது ஆப்பிளும் அப்படி ஒரு செயலியையே உருவாக்கி வருகிறது.
எப்போது வெளியீடு?
மூன்றாம் தர ஜர்னலிங் செயலிகள் நமது மொபைலில் உள்ள தகவல்களை அணுகுவதை நாம் அனுமதிப்பதில்லை, அப்படி அனுமதித்தாலும் அது தகவல் திருட்டுக்கு வழிவகுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆப்பிளின் இந்த செயலியைப் பயன்படுத்தும் போது தகவல் திருட்டு குறித்து ஐபோன் பயனர்கள் அச்சப்படத் தேவையில்லை. எனவே, மொபைல் மூலம் இன்னும் அதிகமாக தகவல்களை கொண்டு பயனர்களால் ஜர்னலிங் செய்ய முடியும். இந்தப் புதிய செயலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும், வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் அந்நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த செயலி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.