நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம், தனது தயாரிப்பு தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றியதிலிருந்து, தனது கால் தடத்தை இந்தியாவில் வலுவாக பதிப்பதிற்கு ஆவன செய்கிறது. அதன் ஒரு படியாக ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ் திறக்க திட்டமிட்டுளதாக தெரிவித்தது. முதற்கட்டமாக, டாடா குரூப்புடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம், நாடு முழுவதும் இந்த மினி ஸ்டோர்களை திறக்க போவதாக தெரிவித்துள்ளது. 150 ஆண்டுகள் பழமையான டாடா குழுமம் ஏற்கனவே நாடு முழுதும் கிரோமா ஸ்டோர்ஸ்-ஐ வெற்றிகரமாக நடத்திக்கொண்டுள்ளது. அதே குடையின் கீழ் டாடா நிறுவனம், ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ் திறக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருப்பதாகவும், ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆப்பிள் மினி ஸ்டோர்கள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடி பரப்பளவில் அமைய போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்
இத்தகைய மினி ஸ்டோர்கள், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 இடங்களில் நிறுவ இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த மினி ஸ்டோர்ஸில் பெரும்பாலும் ஐபாட்ஸ்கள், ஐபோன்கள் மற்றும் வாட்சுகளை மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏனைய தயாரிப்புகள் அதன் பிரீமியம் ஸ்டோர்களில் விற்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஏற்கனவே சுமார் 160 ஆப்பிள் பிரீமியம் ஸ்டோர்கள் இருப்பதாகவும், ஆப்பிளின் முதல் கம்பெனி ஓன்ட் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் மும்பையில் திறக்கப்பட உள்ளதாகவும், முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றது. ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உற்பத்தி திறனை அடுத்த 2 ஆண்டுகளில் மும்மடங்காக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது எனவும் கூறுகிறப்படுகிறது.