மேம்படுத்தப்பட்ட மைக்ரோபோனுடன் வெளியாகவிருக்கும் ஐபோன் 16 சீரிஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இந்நிலையில், அந்நிறுவனத்தின் அடுத்த ஐபோன் சீரிஸான ஐபோன் 16 சீரிஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டன. தற்போது ஐபோன் 16 சீரிஸில் பயன்படுத்தப்படவிருக்கும் மைக்ரோபோன் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, புதிய சீரிஸில் மேம்படுத்தப்பட்ட மைக்ரோபோன்களை அந்நிறுவனம் பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது. அதிக சத்தம் மிக்க இடங்களிலும் பயனாளர்களின் குரலை ஆப்பிளின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டான சிரி கண்டுகொள்ளும் வகையில், சிறப்பான புதிய மைக்குகளை 16 சீரிஸில் பயன்படுத்தவிருக்கிறது ஆப்பிள். மேலும் இந்த மைக்ரோபோன்களை AAC மற்றும் கோயர்டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கலாம் எனவும் தெரிகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகள்:
ஓபன்ஏஐ நிறுவனத்துக்குப் போட்டியாக, தங்களது மேம்படுத்தப்பட்ட ஜெமினி ஏஐ மாடலை வெளியிடத் தயாராகி வருகிறது கூகுள். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியுடன் இயங்குக்ககூடிய ஏஐ கருவிகள் பலவற்றை, தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸான பிக்சல் 8 சீரிஸில் வழங்கியிருந்தது கூகுள். கூகுள் மற்றும் ஓபன்ஏஐ-யைத் தவிர மெட்டா மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை மேம்படுத்தி வரும் நிலையில், ஆப்பிளும் ஐபோன் 16 சீரிஸில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கருவிகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.