
சூதாட்ட செயலிகளை நீக்க முடியாது.. மத்திய அரசின் உத்தரவை ஏற்க மறுத்த ஆப்பிள்!
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் இருந்து சூதாட்ட செயலிகளை நீக்கக்கோரி உத்தரவிட்டது மத்திய அரசு.
கூகுள் ஏற்கனவே இது போன்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அந்த செயலிகளை தங்களுடைய ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க முடியாது எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
மத்திய அரசு கூறுவது போல் சூதாட்ட செயலிகளை நீக்க சட்டரீதியான உறுதியான காரணம் வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
தற்போது மத்திய அரசு குறிப்பிட்டிருக்கும் காரணம், அந்த செயலிகளை தங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
ஆப்பிள்
ஏன் தடை:
இந்த வருடத் தொடக்கத்தில் பெட்வே, பெட்நிக்ஸ் மற்றும் பெட்அனாலிடிக்ஸ் உள்ளிட்ட 130 சூதாட்ட செயலிகளை இரண்டு நிறுவனங்களின் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க உத்தரவிட்டது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம். மேலும், இந்தியாவில் மேற்கூறிய நிறுவனங்கள் செயல்படவும் தடைவிதித்தது மத்திய அமைச்சகம்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-யின் படி இந்திய இறையாண்மை மற்றும் நேர்மைக்கு ஊறு விளைவிப்பதாக மேற்கூறிய செயலிகள் இருக்கின்றன எனக் கூறி தடை செய்து, ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கக் கோரியது மத்திய அரசு.
கூகுள் உடனடியாக இந்த உத்தவுக்கு கீழ்படிந்த செயலிகளை நீக்கிய நிலையில், இந்தக் காரணம் போதாது எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.