M3 சிப்புடன் கூடிய புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோவை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஐமேக் மாடல் ஒன்றை ஆப்பிள் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இறுதியாக 2021ம் ஆண்டு M1 சிப்புடன் கூடிய 24 இன்ச் ஐமேக் மாடலை வெளியிட்டது ஆப்பிள். அதன் பிறகு ஐமேக் குறித்து எந்த அப்டேட்டும் ஆப்பிளிடமிருந்து இல்லை. இந்நிலையில், இந்த மாதம் இறுதியில் புதிய 24 இன்ச் ஐமேக் ஒன்றை ஆப்பிள் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிய ஐமேக் மட்டுமின்றி இரண்டு புதிய மேக்புக் ப்ரோ மாடல்களையும் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது. எப்போதும் அக்டோபர் மாதத்தில் ஒரு வருடாந்திர நிகழ்வை நடத்தி அதில் சில புதிய சாதனங்களை வெளியிடுவது ஆப்பிளின் வழக்கம். எனவே, இந்த முறையும் அப்படியான ஒரு நிகழ்வை ஆப்பிள் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சிப்பை அறிமுகப்படுத்துகிறதா ஆப்பிள்?
இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்களது சக்திவாய்ந்த M2 ப்ரோ மற்றும் M2 மேக்ஸ் சிப்களைக் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். மேலும், புதிய M3 சிப்பை அந்நிறுவனம் உருவாக்கி வந்த நிலையில், அடுத்த நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் நிகழ்வில் புதிய M3 சிப்புடன் கூடிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் 24 இன்ச் ஐமேக்கானது ரூ.1.29 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் M2 ப்ரோ சிப் கொண்ட 14 இன்ச் மேக்புக் ப்ரோவானது ரூ.2.50 லட்சம் விலையிலும், M2 மேக்ஸ் சிப்பைக் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோவானது ரூ.3.10 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.