
பிரான்ஸில் ஐபோனின் 12ன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவீடு பிரச்சினையை சமாளிக்க புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிடும் ஆப்பிள்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவானது தாங்கள் அனுமதித்த அளவை விட அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்த ஸ்மார்ட்போனின் விற்பனையை தங்கள் நாட்டில் தற்காலிகமாக தடை செய்தது பிரான்ஸ்.
பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்கு இடையே கதிர்வீச்சு அளவீட்டு வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகளின் காரணமாகவே அதிக கதிர்வீச்சு அளவு கணக்கிடப்பட்டிருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பிரான்ஸ் அனுமதித்த கதிர்வீச்சு அளவிற்குள் ஐபோன் 12ன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவைக் குறைக்க அந்நாட்டில் ஐபோன் 12-க்கான சாஃப்ட்வேர் அப்டேட் ஒன்றை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிள்
என்ன விதமான அப்டேட்டை வழங்குகிறது ஆப்பிள்?
இந்தப் புதிய சாஃப்ட்வேர் அப்டேட் குறித்து தங்கள் வலைத்தளப் பக்கத்தில் விளக்கத்தைப் பதிவிட்டிருக்கிறது ஆப்பிள். அதில், 'ஐபோனில் பாடி டிடெக்ஷன் சென்சார்கள் பல்லாண்டு காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சென்சாரின் மூலம் ஒரு நபருக்கு அருகில் போன் இருக்கும் போது டிரான்ஸ்மிஷன் பவரின் அளவு தானாகவே குறைந்துவிடும். ஆனால், பிரான்ஸின் அளவீட்டு முறையில் இந்த சென்சாரின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை' எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், புதிய அப்டேட்டின் மூலம் மேற்கூறிய குறிப்பிட்ட சென்சாரின் செயல்பாட்டை நிறுத்திவிருக்கிறது ஆப்பிள். இதன் மூலம் பிரான்ஸின் கதிர்வீச்சு வெளியீட்டு அளவுகோளையும் பூர்த்தி செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
இந்த அப்டேட் இல்லாமலும் ஐபோன் 12ஐ பயன்படுத்துவது பாதுகாப்பானது தான் என்பதனையும் ஆப்பிள் அடிக்கோடிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.