வரவு செலவை இனி ஏஐ பாத்துக்கும்; ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய பேங்கிங் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது கிளாட் ஏஐ சாட்பாட்டில் பயனர்கள் தங்களது வங்கியின் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை நேரடியாக இணைக்கும் புதிய தனிநபர் நிதி (Personal Finance) வசதியை வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் தங்களது மாதாந்திர சம்பளப் பரிவர்த்தனைகள், கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் பிற செலவுப் பழக்கவழக்கங்களை ஏஐ உடன் உரையாடுவதன் மூலம் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். மேனுவலாக வங்கி கணக்கு அறிக்கைகளைப் பார்த்துச் சரிபார்க்கும் சிரமத்தை இந்த தொழில்நுட்பம் முற்றிலுமாகத் தவிர்க்கிறது.
ப்ளாய்டு தொழில்நுட்பம்
ப்ளாய்டு தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் விவரங்கள்
பிரபல நிதித் தொழில்நுட்ப நிறுவனமான ப்ளாய்டு (Plaid) உதவியுடன் இந்த புதிய இணைப்பு வசதியை ஆந்த்ரோபிக் நிறுவனம் சாத்தியப்படுத்தியுள்ளது.
கிளாட் செயலி பயனர்களின் வங்கி கடவுச்சொற்களை ஒருபோதும் சேமிப்பதில்லை எனவும், பயனர் அனுமதியுடன் மட்டுமே வங்கிக் கணக்கு இருப்பு, கடன் வரம்பு மற்றும் 24 மாத கால பரிவர்த்தனைத் தரவுகளை அணுகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிரத்யேக உரையாடல்கள் ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைப்பை நீக்கிக் கொள்ளலாம் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகள்
கிளாட் ஏஐ சாட்பாட்டின் பகுப்பாய்வு திறன்களும் முக்கியக் கட்டுப்பாடுகளும்
இந்த புதிய தனிநபர் நிதி வசதி மூலம் பயனர்கள் தங்களது மாதாந்திர செலவுகள் எங்கு அதிகமாகப் போயின என்பதையும், தொடர்ச்சியாக பிடிக்கப்படும் சந்தா கட்டணங்களையும் விரிவாக அறிந்துகொள்ள முடியும்.
இருப்பினும், இந்த புதிய வசதி மூலம் நிதிகளை வாசித்துக் கணக்கிட மட்டுமே முடியுமே தவிர, பிறருக்குப் பணம் அனுப்புவதோ அல்லது நேரடியாகக் கட்டணங்களை செலுத்துவதோ முடியாது.
மேலும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதற்கோ அல்லது விளம்பரப் பரிந்துரைகளைக் காட்டுவதற்கோ இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது எனவும் ஆந்த்ரோபிக் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
ஏஐ நிதிச் சந்தை
சாட்ஜிபிடி போட்டியும் ஏஐ நிதிச் சந்தையின் எதிர்காலமும்
கடந்த மே 2026-ல் ஓபன்ஏஐ நிறுவனம் தனது சாட்ஜிபிடி தளத்தில் இதுபோன்ற நிதிப் பகுப்பாய்வு வசதிகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆந்த்ரோபிக் நிறுவனமும் இதற்கான போட்டியில் களமிறங்கியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் உள்ள கிளாட் ப்ரோ, மேக்ஸ் மற்றும் அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த புதிய வசதி கிடைக்கிறது.
ஏஐ செயலிகள் மூலம் தினசரி பணப்பரிவர்த்தனைகள் மற்றும் வணிக செயல்பாடுகளை எளிதாக்கும் சர்வதேசப் போட்டியின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த புதிய அறிவிப்பு பார்க்கப்படுகிறது.