LOADING...
பனிக்கட்டியிலிருந்து வழியும் இரத்தம்! அண்டார்டிகாவில் மட்டும் காணப்படும் விசித்திர நீர்வீழ்ச்சி! இதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை என்ன?
அண்டார்டிகாவின் மர்மமான இரத்த நீர்வீழ்ச்சி குறித்த அதிர்ச்சியூட்டும் பின்னணி

பனிக்கட்டியிலிருந்து வழியும் இரத்தம்! அண்டார்டிகாவில் மட்டும் காணப்படும் விசித்திர நீர்வீழ்ச்சி! இதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 06, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிகக்குளிர்ச்சியான அண்டார்டிகா கண்டத்தில், மெக்மர்டோ உலர் பள்ளத்தாக்குகளில் (McMurdo Dry Valleys) ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி வழிந்தோடுகிறது. 1911 ஆம் ஆண்டில் புவியியலாளர் தாமஸ் கிரிஃபித் டெய்லர் என்பவரால் கண்டறியப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி, பிளட் ஃபால்ஸ் (Blood Falls) அல்லது இரத்த நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. பனி படர்ந்த வெள்ளை நிறப் பின்னணியில் ஐந்து அடுக்கு மாடி உயரத்திற்குச் சிவப்பாக வழியும் இந்த நீர்வீழ்ச்சி காண்போரை உறைய வைக்கிறது.

நிறம்

ஏன் இந்த நிறம்?

ஆரம்ப காலத்தில் இது சிவப்பு நிறப் பாசிகளால் (Red Algae) ஏற்படுவதாக நம்பப்பட்டது. ஆனால், 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நவீன ஆய்வுகள் இதன் உண்மையான காரணத்தைக் கண்டறிந்தன: இரும்புச்சத்து மிக்க நீர்: சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, டெய்லர் பனிப்பாறைக்கு அடியில் 400 மீட்டர் ஆழத்தில் ஒரு உப்பு நீர் ஏரி சிக்கிக்கொண்டது. ஆக்சிஜனேற்றம் (Oxidation): காற்றில்லா இருளில் பல மில்லியன் ஆண்டுகளாக உறைந்து கிடந்த இந்த நீரில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. இந்த நீர் பனிப்பாறையின் இடுக்குகள் வழியாக வெளியே வந்து காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது, அது இரும்பு ஆக்சைடாக (துரு) மாறுகிறது. இதுவே அந்த நீருக்குத் அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது.

நீர்வீழ்ச்சி

உறையாத நீர்வீழ்ச்சி

அண்டார்டிகாவின் வெப்பநிலை -19°C-க்கும் கீழே சென்றாலும், இந்த நீர்வீழ்ச்சி உறைவதில்லை. இதற்குக் காரணம் அதன் அதிகப்படியான உப்புத்தன்மை (Salinity) ஆகும். சாதாரண கடல் நீரை விட இரண்டு மடங்கு அதிக உப்புத்தன்மை கொண்டிருப்பதாலும், பனிப்பாறைகளின் கடுமையான அழுத்தத்தாலும் இந்த நீர் உறைநிலையிலும் திரவமாகவே இருக்கிறது.

Advertisement

ஆராய்ச்சி

விண்வெளி ஆராய்ச்சிக்கான துப்பு

இந்த நீர்வீழ்ச்சி ஒரு காலப் பெட்டகம் (Time Capsule) போன்றது. ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளி இல்லாத இந்த அதீத சூழலிலும் சில நுண்ணுயிரிகள் உயிர்வாழ்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வியாழன் கோளின் நிலவான யூரோப்பா (Europa) போன்ற பனிக்கட்டிகள் நிறைந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பதை ஆராய இந்த இரத்த நீர்வீழ்ச்சி ஒரு சிறந்த களமாக விளங்குகிறது. ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே செல்லக்கூடிய இந்த இடம், இன்றும் உலகின் மிகப்பெரிய இயற்கை மர்மங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

Advertisement