5 ரூபாயில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி.. உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ரத்த அழுத்தத்தை அளவிடும் விலை மலிவான கருவி ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர்.
இந்த புதிய கருவியை தயாரிக்க அவர்களுக்கு வெறும் 80 சென்ட்கள் (இந்திய மதிப்பில் 5.6 ரூபாய்) மட்டுமே தேவைப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், இதனை அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்யும் போது, வெறும் 10 சென்ட்களில் (இந்திய மதிப்பில் 70 காசுகள்) இந்த கருவியை தயாரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
ரத்த அழுத்தத்தை தினமும் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும், அதே நேரத்தில் தினமும் மருத்துவமனை செல்ல முடியாத அல்லது போதிய பணமில்லாதவர்கள் பயன்படுத்தும் வகையில இந்த புதிய கருவியை உருவாக்கியிருப்பதாக, இதனை உருவாக்கியவர்களுள் ஒருவரான பிஎச்டி மாணவரான யினன் சுவன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
எப்படி இயங்குகிறது:
இந்த புதிய கருவியானது நமது ஸ்மார்ட்போன்களின் கேமராவுடன் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் சிறிய அளவிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கருவியுடன் இயங்கும் வகையிலான செயலி ஒன்றையும் இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும் இந்தக் கருவியில் நமது விரல்நுனியை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எவ்வளவு நேரம் அழுத்தம் கொடுக்க வேண்டும், எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற வழிமுறைகளை அந்த செயலி நமக்கு வழக்கும்.
பின்னர் கேமராவின் மூலம் அந்தக் கருவி பெறும் தகவலைக் கொண்டு நம்முடைய ரத்த அழுத்தத்தின் அளவை கணக்கிடும். இந்த அளவை நமது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்திருக்கும் அவர்களது செயலியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இதனை வெற்றிகரமாக சோதனை செய்தும் பார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.