Page Loader
உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம்
சூரிய ஒளி பூமியில் விழுவதைத் தடுக்க புதிய திட்டங்களை ஆராய்ந்து வரும் அமெரிக்கா

உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 03, 2023
11:13 am

செய்தி முன்னோட்டம்

உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் அல்லது குறைக்கும் வகையிலான புதிய திட்டங்களை செயல்படுத்தும் தீவிரத்துடன் இருக்கிறது, ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு. அதன் ஒரு பகுதியாக, சூரியஒளி பூமியை அடையாமல் குறைக்கும் வகையில் புதிய திட்டத்தை தீட்டி வருகிறது அமெரிக்கா. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் திட்டம் குறித்து அமெரிக்கா விவாதித்து வரும் நிலையில், தற்போது அது குறித்த புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சூரியஒளி பூமியில விழாமல் தடுக்க பல புதிய வழிமுறைகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியஒளி தடுப்பு குறித்த இந்த ஆராய்ச்சிகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என கடந்த ஆண்டு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கிணங்க, இந்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா

அமெரிக்காவின் திட்டம் என்ன?

சூரிய ஒளியானது பூமியில் விழாமல் தடுக்க, stratospheric aerosol injection, Marine cloud brightening மற்றும் cirrus cloud thinning ஆகிய வழிமுறைகளை அமல்படுத்துவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், விண்வெளியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், வளிமண்டலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளைக் கடந்து, சூரியஒளியைத் தடுப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தே அதிக அளவிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியஒளியைத் தடுப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து தெரிந்து கொண்டால், அதற்கேற்ற வகையில் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என நம்புகிறது அமெரிக்க அரசு.