100 மொழிகள் வரை அடையாளம் கண்டு படியெடுக்கும் திறனைப் பெற்ற அமேசான் டிரான்ஸகிரைப் சேவை
அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) வழங்கி வரும் அமேசான் டிரான்ஸ்கிரைப் தளமானது தற்போது 100 மொழிகளைப் படியெடுக்கும் திறன்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். நேற்று (நவம்பர் 28) தொடங்கி டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெறவிருக்கும் AWS ரீ-இன்வென்ட் நிகழ்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். கடந்த 2022ம் இறுதி வரை 79 மொழிகள் வரை மட்டுமே படியெடுக்கும் வசதியை படியெடுக்கும் வசதியைக் கொண்டிருந்தது அமேசான் டிரான்ஸ்கிரைப் சேவை. ஆனால், தற்போது 100 மொழிகளின் பல லட்சம் மணி நேர ஆடியோ தொகுப்பைக் கொண்டு தங்களது சேவையை பயிற்றுவித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது AWS. மேலும், அமேசான் டிரான்ஸ்கிரைப் சேவையானது உருவாக்க செயற்கை நுண்ணறிவு மாடல்களையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
அதிகரித்து வரும் போட்டி:
சமீபத்திய மேம்பாடுகளின் காரணமாக, பல்வேறு மொழிகளில் முன்பை விட 20% முதல் 50% வரை துல்லியமான பயன்பாடை அமேசான் டிரான்ஸகிரைப் சேவையால் வழங்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அமேசான். மேலும், ஆடியோ மட்டுமல்லாது வீடியோ ஃபார்மெட் மற்றும் இறைச்சலான இடங்களில் இருந்து பேசப்படும் ஆடியோக்களையும் கூட துல்லியமாக அடையாளம் கண்டு படியெடுக்கும் திறனை அமேசான் டிரான்ஸ்கிரைப் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் படியெடுக்கும் வசதிகளை ஓட்டர் என்ற நிறுவனம் வழங்கி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக தாங்களும் செயற்கை நுண்ணறிவு வசதிகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது அமேசான் டிரான்கிரைப். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 100 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்ப்பு செய்யும் கருவியை மெட்டா மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.