பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ₹9 கோடி சம்பாதிக்கலாம்! இல்லையெனில் கட்டணம் வாபஸ்; ஏஐ பள்ளியின் மெகா ஆஃபர்
செய்தி முன்னோட்டம்
கல்வி என்பது இன்று மிக விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலில், அமெரிக்காவின் ஆல்பா பள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது. இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்குள் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹9.25 கோடி) சம்பாதிக்க வேண்டும், அப்படிச் சம்பாதிக்கவில்லை என்றால் அவர்கள் செலுத்திய முழு கல்விக்கட்டணமும் திருப்பித் தரப்படும் என்று அந்தப் பள்ளி அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
ஏஐ
ஏஐ மூலம் 2 மணிநேரக் கல்வி
ஆஸ்டின், டெக்சாஸ் நகரில் அமைந்துள்ள இந்த ஆல்பா பள்ளி, பாரம்பரிய ஆசிரியர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவை (ஏஐ) முதன்மையாகக் கொண்டு இயங்குகிறது. சாட்ஜிபிடி மற்றும் கிளாட் போன்ற ஏஐ கருவிகள் மூலம், ஒரு நாள் முழுவதும் படிக்க வேண்டிய பாடங்களை மாணவர்கள் வெறும் 2 மணிநேரத்தில் கற்று முடித்துவிடுகின்றனர். மீதமுள்ள நேரத்தை அவர்கள் தங்களுக்குப் பிடித்த புராஜெக்ட்கள் மற்றும் தொழில்முனைவோர் திறன்களை வளர்த்துக்கொள்ளப் பயன்படுத்துகின்றனர்.
திட்டம்
மில்லியனர் ஆகும் திட்டம் எப்படிச் செயல்படுகிறது?
ஆல்பா பள்ளியின் நிறுவனர் மெக்கன்சி பிரைஸ் மற்றும் கேமரூன் சோர்ஸ்பி ஆகியோர் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்காகத் திறமையான பயிற்சியாளர்களை பள்ளி நியமிக்க உள்ளது. இந்தப் பயிற்சியாளர்கள் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்த மாட்டார்கள். மாறாக, மாணவர்கள் வாங்கும் தொழில்கள் (உதாரணமாக கார் வாஷ்), அவர்களின் லாப நஷ்டக் கணக்குகள் மற்றும் அவர்களின் இ-மெயில் மார்க்கெட்டிங் போன்ற நிஜ உலகத் தொழில்களை எப்படி நடத்துவது என்று பயிற்சி அளிப்பார்கள்.
கட்டணம்
கட்டணம் மற்றும் ரீஃபண்ட் விபரம்
ஆல்பா பள்ளியில் சேர ஆண்டுக்கு 40,000 டாலர் (சுமார் ₹37 லட்சம்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு மாணவன் தனது பள்ளிப் படிப்பை முடிக்கும்போது 1 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டாவிட்டால், பெற்றோர் செலுத்திய இந்த முழுத் தொகையையும் திருப்பித் தருவதாகப் பள்ளி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களை உலகத்தரம் வாய்ந்த தொழில்முனைவோராக உருவாக்குவதே தங்களது நோக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு
ஏஐ பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பு
இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மாணவர்களுக்கு வழிகாட்டத் தகுதியான பயிற்சியாளர்களைப் பள்ளி தேடி வருகிறது. இந்தப் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுக்கு 1,50,000 டாலர் (சுமார் ₹1.38 கோடி) சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை உலகமே சாத்தியமில்லை என்று நினைக்கும் காரியங்களைச் செய்ய வைப்பதே இந்தப் பயிற்சியாளர்களின் முக்கியப் பணியாகும்.