Loading...
வேலை இழப்பை விட 2.6 மடங்கு புதிய வேலைகள்! இந்தியாவில் AI உருவாக்கிய அதிசயம்; நோமுரா ஆய்வின் பின்னணி
இந்தியாவில் AI வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு

வேலை இழப்பை விட 2.6 மடங்கு புதிய வேலைகள்! இந்தியாவில் AI உருவாக்கிய அதிசயம்; நோமுரா ஆய்வின் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2026
03:55 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வருகையால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், ஒரு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆய்வு வெளிவந்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனமான நோமுரா வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு காரணமாக இழக்கப்பட்ட வேலைகளை விட உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. கடந்த 2022 முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவில் 31,921 வேலைகள் பாதிக்கப்பட்ட நிலையில், 83,100 புதிய ஏஐ சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு நிறுவனங்களால் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய வேலைவாய்ப்புகள்

ஒரு வேலை இழப்பிற்கு 2.6 புதிய வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பை சந்தித்த ஒவ்வொரு ஒரு நபருக்கும் பதிலாக சராசரியாக 2.6 ஏஐ சார்ந்த புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நோமுரா பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வாடிக்கையாளர் சேவை மற்றும் வழக்கமான சோதனைப் பணிகளில் இருந்தவர்கள் சாட்பாட்களால் மாற்றப்பட்டு வேலை இழந்துள்ளனர்.

அதேசமயம், ஏஐ தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கும் மற்றும் பராமரிக்கும் திறன் கொண்ட கணினித் துறைப் பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தேவைகள் மிக வேகமாகக் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சவால்

புள்ளிவிவரங்களுக்கு பின்னால் இருக்கும் இருமுனை வேலைச் சந்தை

இருப்பினும், இந்த நேர்மறையான புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நடைமுறைச் சவாலும் மறைந்துள்ளது.

வாடிக்கையாளர் சேவையில் வேலையை இழந்த ஒரு சாதாரண ஊழியரால், உடனடியாக செயற்கை நுண்ணறிவுப் பொறியாளர் பணிக்கு மாற முடியாது.

புதிய வேலைகளுக்கு உயர்கல்வி, புதிய வேலைத் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அனுபவம் ஆகியவை தேவைப்படுகின்றன.

இதனால் வேலை வாய்ப்புகள் உருவானாலும், வேலையிழந்த பாமரப் பணியாளர்கள் புதிய வேலைகளைப் பெற முடியாமல் தவிக்கும் நிலை உருவாகி இருமுனை வேலைச் சந்தை நாட்டில் தீவிரமாக உருவெடுத்து வருகிறது.

ADVERTISEMENT

தொழில்நுட்பப் பயிற்சிகள்

புதிய தொழில்நுட்பப் பயிற்சிகளின் அவசியமும் சவால்களும்

ஆசியப் பிராந்தியத்தில் ஏஐ தொழில்நுட்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பயனடைந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைச் சந்தையில் புதிதாக நுழையும் சூழலில், நிறுவனங்கள் ஆரம்பநிலை பணியாளர்களை விடத் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற அனுபவமிக்க நபர்களையே அதிகம் விரும்புகின்றன.

எனவே, வேலைகளை இழக்கும் பணியாளர்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி அவர்களைத் தயார்படுத்துவதே இந்திய வேலைவாய்ப்புத் துறையின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT