உலக சுற்றுலா தினம்: இந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள்
சுற்றுலா பிரியர்களுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிக்கத்தக்க விருப்பங்கள் உண்டு. பிரபலமான சுற்றுலாப் பகுதிகள் முதல் விசித்திரமான மற்றும் அமைதியான இடங்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இடம் நிச்சயம் நம் நாட்டில் உண்டு. இருப்பினும், இந்த உலக சுற்றுலா தினத்தில் , இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படாத மற்றும் அழகான சில இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த முறை நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் எனவோ, அல்லது கூட்டத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பினால், இந்த இடங்களை தேர்ந்தெடுக்கலாம்.
ஹெமிஸ், லே
லே மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வினோதமான, அழகான கிராமமான ஹெமிஸ் பல காரணங்களுக்காக ஆராயத் தகுந்தது. வடக்கே காரகோரம் மலைகளுக்கும், தெற்கே இமயமலைக்கும் இடையில் அமைந்துள்ள இந்த இடம் புகழ்பெற்ற ஹெமிஸ் மடாலயத்திற்கு பெயர் பெற்றது. இது ஹெமிஸ் தேசிய பூங்காவின் தாயகமாகவும் உள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அங்கு நீங்கள் அபூர்வமான பனிச்சிறுத்தையையும் பார்க்கலாம். அதோடு, நீங்கள் லாங்கர், ஓநாய்கள், சிவப்பு நரிகள், மான்கள் மற்றும் மர்மோட்களின் அணிவகுப்பையும் கூட காணலாம்.
மவ்லிங்ப்னா, மேகாலயா
ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக அறியப்படும் மவ்லிங்ப்னா, மேகாலயாவின் சாகச மையமாகும். இது இந்திய-வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது. இந்த சிறிய கிராமம் அதன் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தில் மூழ்குவதற்கான வாய்ப்பை சுற்றுலாவாசிகளுக்கு வழங்குகிறது. பார்வையாளர்கள் கிராமத்தை சுற்றிப்பார்க்கலாம் மற்றும் அழகான மலர் தோட்டங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை ரசிக்கலாம்.
குரேஸ் பள்ளத்தாக்கு, காஷ்மீர்
பனி மூடிய சிகரங்கள் மற்றும் சலசலக்கும் நீரோடைகளுக்கு மத்தியில் ஆடு மேய்ப்பவர்களின் நாடோடி வாழ்க்கை முறையை அனுபவிப்பது உங்கள் பக்கெட் லிஸ்டில் ஒரு இனிய அனுபவமாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக குரேஸ் பள்ளத்தாக்குக்குச் செல்ல வேண்டும். இந்த தொலைதூர பள்ளத்தாக்கு இந்தியாவின் தனித்துவமான இடங்களில் ஒன்றாகும். இமயமலையின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், முகாம் அனுபவங்கள் மற்றும் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளில் மூழ்குவதற்கான வாய்ப்பை இது இயற்கையான மலையேற்ற பாதைகளுக்கு இடையே வழங்குகிறது.
காஷித், மகாராஷ்டிரா
கொங்கன் பெல்ட்டில் அமைந்துள்ள இந்த கடற்கரை நகரம், கம்பீரமான பாறைகள், படிக நீர் மற்றும் தங்க மணல் ஆகியவற்றால் சூழப்பட்ட மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரைகளில் ஒன்றாகும். நாட்டின் அழகை இழக்காத சில கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. முருத் ஜஞ்சிரா கோட்டை, பன்சாத் வனவிலங்கு சரணாலயம், ரேவ்தண்டா கடற்கரைக் கோட்டை மற்றும் கோர்லாய் கோட்டை ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.
சந்தக்பூ, டார்ஜிலிங்
சந்தக்பூ டார்ஜிலிங்கில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இது கிழக்கு இமயமலையின் மிக உயரமான இடங்களைக் குறிக்கிறது. சாகச ஆர்வலர்கள் சந்தக்பூ பலுட் மலையேற்றத்திற்கு செல்லலாம். இது உலகின் மிக உயரமான நான்கு சிகரங்களைப் பார்க்கும் மூச்சடைக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகிறது - தூங்கும் புத்தர், காஞ்சன்ஜங்கா, லோட்சே மற்றும் மகாலு. பலுத், மேக்மா மற்றும் தும்லிங் ஆகியவை சந்தக்பூவில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களாகும். ஆண்டின் எந்த நேரத்திலும் இங்கே செல்லலாம். இருப்பினும், சந்தக்பு ஃபலூட் மலையேற்றத்தை வசந்த காலத்தில் (மார்ச் முதல் மே வரை) மற்றும் இலையுதிர் காலத்தில் (அக்டோபர் முதல் நவம்பர் வரை) மேற்கொள்ளவது அறிவுறுத்தப்படுகிறது.