உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்
உலக யானைகள் தினம் என்பது யானைகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச விழிப்புணர்வு பிரச்சாரமாகும். இது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித-யானை மோதல்கள் உட்பட யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானை இனங்களின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படும் நிலையில், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது 2023 ஆம் ஆண்டு உலக யானைகள் தினத்தின் கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருள் யானையின் தந்தம் மற்றும் பிற பொருட்களின் சட்டவிரோத வர்த்தகத்தை நிறுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
யானைகளின் சில தனித்துவமான குணங்கள்
யானைகள் ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் வரை தொடர்ந்து சாப்பிடும் திறன் கொண்டதோடு ஒரு நாளைக்கு 150 கிலோ வரை சாப்பிடும். ஆனால் அதில் பாதி உடலை ஜீரணிக்காமல் கழிவாக வெளியேற்றிவிடும். யானைகள் பொதுவாக அதன் சத்தத்திற்காகவே அதிகம் அறியப்பட்டாலும், அவை மனிதர்களால் அரிதாகவே கேட்கக்கூடிய குறைந்த ஒலிகள் மற்றும் காலின் மூலம் நிலத்தில் தட்டி அதிர்வை ஏற்படுத்துவதன் மூலம் சுமார் இரண்டு மைல் தூரம் வரை உள்ள மற்ற யானைகளுடன் தொடர்பு கொள்கின்றன. மனிதர்கள் இடது-வலது கையில் ஒன்றை அதிகம் பயன்படுத்துவதைப் போல், யானைகளும் ஒரு தந்தத்தை அதிகம் விரும்பி பயன்படுத்தும். யானையின் தும்பிக்கைகள் மிகவும் உணர்திறன் கொண்டவை மற்றும் சுமார் 1,50,000 தசை செல்கள் அதில் உள்ளன.