மருத்துவ உலகில் இந்தியாவின் மாபெரும் உலக சாதனை! அமெரிக்க எஃப்டிஏ ஒப்புதல் பெற்ற முதல் உள்நாட்டு ஆன்டிபயாடிக் ஜெய்னிக்
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக விளங்கும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத சூப்பர்பக்ஸ் பாக்டீரியாக்களுக்கு எதிராக, இந்தியாவின் முதல் உள்நாட்டு ஆன்டிபயாடிக் மருந்தான ஜெய்னிக் உலகளாவிய அளவில் புதிய மருத்துவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த பிரபல வோக்ஹார்ட் பொதுத்துறை மருந்து நிறுவனம் முற்றிலும் உள்நாட்டிலேயே கண்டறிந்து உருவாக்கிய இந்த புதிய உட்செலுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்பொழுது அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றால் முழுமையாகக் கண்டறியப்பட்டு, உலகத் தரம் வாய்ந்த அமெரிக்க எஃப்டிஏ அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறும் முதல் புதிய வேதியியல் மூலக்கூறு இதுவேயாகும்.
ஆபத்தான பாக்டீரியாக்கள்
ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் மற்றும் நைட்டமேர் பாக்டீரியாக்களின் ஆபத்து
உலக சுகாதார நிறுவனத்தால் தற்பொழுது மிகப்பெரிய உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான அல்லது தவறான ஆன்டிபயாடிக் பயன்பாடுகளால், பாக்டீரியாக்கள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டு தற்போதைய மருத்துவ முறைகளுக்குக் கட்டுப்படாமல் வீரியமடைகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி, 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் இந்த பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. குறிப்பாக எஸ்கெரிச்சியா கோலி, கிளெப்செல்லா நிமோனியா போன்ற நைட்மேர் பாக்டீரியாக்கள் (Nightmare Bacteria) தீவிரச் சிறுநீரகத் தொற்று மற்றும் நிமோனியாவை ஏற்படுத்தி, தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் உயிருக்கே பேராபத்தாக முடிகின்றன.
செயல்பாடு
ஜெய்னிக் மருந்தின் தனித்துவமான இரட்டைச் செயல்பாட்டுத் தொழில்நுட்பம்
சந்தையில் உள்ள வழக்கமான ஆன்டிபயாடிக் மருந்துகள் தோல்வியடையும் இடத்தில், இந்த அடுத்த தலைமுறை மருந்தான ஜெய்னிக் மிக வீரியமாகச் செயல்படுகிறது. இது பல தசாப்தங்களாகப் பயன்பாட்டில் உள்ள செஃபெபைம் (Cefepime) என்ற நான்காம் தலைமுறை ஆன்டிபயாடிக் மருந்துடன், வோக்ஹார்ட் நிறுவனத்தால் புதிதாகக் கண்டறியப்பட்ட ஜைடிபாக்டம் (Zidebactam) என்ற மூலக்கூறைத் துல்லியமாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைச் செயல்பாட்டு முறை (Multi-target approach), பாக்டீரியாக்களின் செல் சுவர்களைப் பல முனைகளில் இருந்து தாக்கி அழிப்பதுடன், ஆன்டிபயாடிக் மருந்துகளைச் சிதைப்பதற்காகப் பாக்டீரியாக்கள் சுரக்கும் பீட்டா-லாக்டமேஸ் (Beta-lactamase) என்சைம்களின் தற்காப்பு அரணையும் முழுமையாக முறியடித்து, நோயை வேரோடு குணப்படுத்துகிறது.
மருத்துவ பரிசோதனை
மருத்துவச் சோதனையின் அசாத்திய வெற்றிகளும் சந்தை நிலவரமும்
அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியா உட்பட உலகளவில் 64 மருத்துவ மையங்களில் 530 தீவிர நோயாளிகளிடம் நடத்தப்பட்ட என்ஹான்ஸ்-1 (ENHANCE-1) என்ற மூன்றாம் கட்ட மருத்துவக் கிளினிக்கல் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே இந்த எஃப்டிஏ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இச்சோதனையில், தீவிரத் தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் தற்போதைய முதன்மை மருந்தான மெரோபெனெம் (Meropenem) 68.4 சதவீத நுகர்வோரை மட்டுமே குணப்படுத்திய வேளையில், ஜெய்னிக் மருந்து 89 சதவீத நோயாளிகளை முழுமையாகக் குணப்படுத்திப் புரட்சி படைத்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் ஒரு முழுமையான சிகிச்சை முறைக்கு 10,000 முதல் 12,000 டாலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இம்மாபெரும் கண்டுபிடிப்பு, கடந்த மே மாதமே இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.