ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதா? இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்
செய்தி முன்னோட்டம்
பாரம்பரியமாகவே குழந்தைகளுக்கு பிறந்தவுடன் தேன் கொடுக்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது. தேன் ஆரோக்கியமானது என்றாலும், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதை கொடுப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதை மறுப்பவர்களை உண்டு, ஆதரிப்பவர்களும் உண்டு. இந்த கட்டுரை பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் உடல்நல ஆபத்துகளை எடுத்துரைக்கிறது.
போட்டுலிசம்
உயிருக்கு ஆபத்தான 'போட்டுலிசம்' (Infant Botulism)
தேனில் Clostridium botulinum என்ற பாக்டீரியாவின் ஸ்போர்கள் (Spores) இருக்கலாம். வளர்ந்த மனிதர்களின் செரிமான மண்டலம் இந்த பாக்டீரியாவை அழிக்கும் திறன் கொண்டது. ஆனால், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் செரிமான மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. இதனால் அந்த பாக்டீரியாக்கள் குழந்தையின் குடலில் தங்கி, நச்சுத்தன்மையை (Toxin) உருவாக்குகின்றன. இது 'Infant Botulism' என்ற அபாயகரமான நிலையை ஏற்படுத்துகிறது.
அறிகுறி
'Infant Botulism' அறிகுறிகள் என்ன?
தேனில் உள்ள நச்சு குழந்தையைப் பாதித்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்: 1. கடுமையான மலச்சிக்கல் (இதுவே முதல் அறிகுறி). 2. பால் குடிப்பதில் சிரமம் அல்லது சோர்வு. 3. குழந்தையின் உடல் தளர்வடைதல் (Floppy baby syndrome). 4. தொடர்ந்து அழுவதற்குத் தெம்பு இல்லாமல் இருப்பது. 5. மூச்சு விடுவதில் சிரமம்.
கவனம்
பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கைகள்
ஒரு வயது வரை தவிர்க்கவும்: தேன் நேரடியாகவோ அல்லது பிஸ்கட், பிரட் போன்றவற்றில் கலந்தோ ஒரு வயது முடியும் வரை குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது. பாக்டீரியாக்கள் அழியாது: தேனை சூடுபடுத்துவதாலோ அல்லது கொதிக்க வைப்பதாலோ அதில் உள்ள அந்த குறிப்பிட்ட பாக்டீரியா ஸ்போர்களை அழிக்க முடியாது. தேனுக்கு பதிலாக மருத்துவரின் ஆலோசனையின்படி தாய்ப்பால் அல்லது இணை உணவுகளைக் கொடுப்பதே சிறந்தது. உங்கள் குழந்தைக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.