பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தை கூட்ட சில வழிகள் இதோ!
குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல், படிக்க வைப்பது ஒரு கலை. படிப்பில் ஈடுபாடுகாட்டி அவர்களை படிக்க வைக்க சில சுவாரஸ்ய வழிகள் இதோ: படிப்பை வேடிக்கையாக்குங்கள்: படிக்கும் போது, எப்போதும் கண்டிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திட்டுவதால், குழந்தைகள் அந்த சூழலில் இருந்து வெளியேறதான் நினைப்பார்களே தவிர, படிக்கும் ஆர்வத்தை பெற மாட்டார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், குழந்தைகளை பொறுமையாக கையாள வேண்டும். வேடிக்கையாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும், பாடங்களை சொல்லி தரலாம் வெகுமதி: உங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவதற்காக விலையுயர்ந்த பொருட்களை பரிசளிக்க வேண்டியதில்லை. சிறுசிறு அங்கீகாரங்கள் கூட அவர்களுக்கு வெகுமதி தான். அவர்களுக்கு தரப்படும் அங்கீகாரம், அவர்களை மகிழ்வித்து, அவர்களை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படத் தூண்டும்.
படிப்பார்வத்தை மேலும் வளர்க்க வேண்டும்
கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்: படிக்க உட்காரும் போது, குழந்தைகள் பேசுவதை கவனமாக கேளுங்கள். அவர்களை, கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள். அதற்கு சரியான பதிலையும் கூறுங்கள். தினமும் சொல்லித்தரப்படும் பாடங்களை பற்றி உரையாடுங்கள். அதனால் குழந்தைகள் பள்ளியில் விழிப்புடன் கவனிக்க முனைவார்கள். படிக்க ஊக்குவிக்கவும்: சில குழந்தைகளுக்கு புத்தகம் படிக்க பிடிக்கும். அவர்கள் அறிவு வளர்ச்சியை தூண்டும் வகையில் பல புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கலாம். சில நேரங்களில், நீங்கள் வாசித்தும் காட்டலாம். இதனால் அவர்கள் கற்பனை சக்தி அதிகரிக்கும். சரியான படிப்பு சூழலை உருவாக்குங்கள்: பிள்ளைகள் கவனம் சிதறாமல் இருக்க, அவர்கள் படிக்க ஏதுவான சூழலை தருவது அவசியம். குழந்தைகள் படிக்கும் அறையில், அமைதியான சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.