LOADING...
வயிறு நிறையுது.. ஆனா சத்து சேருதா? நகர்ப்புற குழந்தைகளைத் தாக்கும் சைலண்ட் நோய்கள்
நகரத்துக் குழந்தைகள் சத்தான உணவு சாப்பிட்டும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதன் காரணம்

வயிறு நிறையுது.. ஆனா சத்து சேருதா? நகர்ப்புற குழந்தைகளைத் தாக்கும் சைலண்ட் நோய்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2026
02:03 pm

செய்தி முன்னோட்டம்

நகரங்களில் வசிக்கும் பல குழந்தைகள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும், வேளை தவறாமல் உணவு உண்பவர்களாகவும் தெரிந்தாலும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனை மறைமுகப் பசி என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். அதாவது, குழந்தையின் வயிறு நிறைந்திருக்கும், ஆனால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதில் இருக்காது. இரும்புச்சத்து, வைட்டமின் D, B12, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்களின் குறைபாடு இன்று நகர்ப்புறக் குழந்தைகளிடம் பெருமளவில் காணப்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்

கவனிக்க வேண்டிய முக்கிய ஊட்டச்சத்து குறைபாடுகள்

இரும்புச்சத்து குறைபாடு: இது குழந்தைகளுக்கு அடிக்கடி சோர்வு, கவனச்சிதறல் மற்றும் தலைவலியை உண்டாக்கும். மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் செல்வது குறைவதால், படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். வைட்டமின் D குறைபாடு: குழந்தைகள் அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே (திரை முன் அல்லது வகுப்பறையில்) செலவிடுவதால், சூரிய ஒளி கிடைக்காமல் எலும்புகள் பலவீனமடைகின்றன. இது அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கும் காரணமாகிறது. வைட்டமின் B12 மற்றும் கால்சியம்: குறிப்பாக சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ளும் குடும்பங்களில் B12 குறைபாடு அதிகம் காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைப் பாதித்து, குழந்தைகளை மந்தமாக மாற்றும்.

அறிகுறிகள்

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

ஊட்டச்சத்து குறைபாடு என்பது திடீரெனத் தெரியாது; அது அன்றாடப் பழக்கவழக்கங்களில் மிக நுட்பமாக வெளிப்படும்: அசாதாரண எரிச்சல் அல்லது கோபம். பள்ளியில் பாடங்களைக் கவனிப்பதில் சிரமம். அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல். வயதுக்கேற்ற உயரம் வளராமை. சரியான உணவை உட்கொண்டாலும் உடல் எடை திடீரென அதிகரித்தல். இவற்றை வெறும் பிடிவாதம் என்று கடந்து போகாமல், உடலின் எச்சரிக்கை சமிக்கைகளாகப் பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

தீர்வுகள்

ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு என்ன செய்யலாம்?

நகர்ப்புற வாழ்வியலில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதே இந்தக் குறைபாடுகளுக்கு முக்கியக் காரணம். இதனைச் சரிசெய்ய தினசரி குறைந்தது 15 நிமிடங்கள் குழந்தைகளைச் சூரிய ஒளியில் விளையாட விட வேண்டும். உணவில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, பால் மற்றும் பருவகாலப் பழங்களைச் சேர்க்க வேண்டும். சர்க்கரை கலந்த பானங்களுக்குப் பதிலாக இளநீர், மோர் அல்லது பழச்சாறுகளைத் தரலாம். சீரான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் அளவுகளைச் சரிபார்க்க வேண்டும்.

Advertisement