அதிகரிக்கும் 'மூளையைத் தின்னும் அமீபா' தொற்றுகள்; தமிழக அரசு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழிகாட்டுதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய மூளைத் தொற்று ஆகும்.
அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்கனவே 3 சிறுவர்கள் இந்த நோயால் உயிரிழந்திருக்கும் நிலையில், நேற்று மற்றொரு 14 வயது சிறுவனுக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் விளைவாக தமிழக அரசு இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டுதல்
இந்த தொற்றுக்கான தமிழக அரசின் வழிகாட்டுதல் என்ன?
"தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்".
"அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்".
"தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேரளாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குணப்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து மருந்துகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் கேரளா சிறுவன், ஜூலை 1ஆம் தேதி அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.