தீபாவளி இனிப்பு, காரம் விற்பனையாளர்களுக்கு மருத்துவச் சான்று கட்டாயம்: உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் வணிகர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு இக்கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, பண்டிகைக் காலத்தில் இனிப்பு, கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து சிறு மற்றும் பெரு விற்பனையாளர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் (FSSAI) கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யாமல் விற்பனை செய்தால் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிகள்
விற்பனையாளர்களுக்கான முக்கிய விதிகள்
உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பணியாளர்கள் மற்றும் தின்பண்டங்களைக் கையாளுபவர்கள் கண்டிப்பாக உடல் தகுதி மருத்துவச் சான்றை பெற்றிருக்க வேண்டும்.
உணவைக் கையாளுபவர்கள் கண்டிப்பாகத் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
உணவு தயாரிக்கும் இடங்களில் வெற்றிலைப் பாக்கு, புகையிலை மெல்லுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரமான எண்ணெய், நெய் மற்றும் கலப்படமில்லாத மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு
பேக்கிங், லேபிளிங் & வாடிக்கையாளர் பாதுகாப்பு
பரிசுப் பெட்டகங்கள் மற்றும் பொட்டலங்களில் அடைக்கப்படும் தின்பண்டங்களில் பொருளின் பெயர், உற்பத்தி செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி மற்றும் FSSAI பதிவு எண் ஆகியவற்றை லேபிளில் தெளிவுபடுத்த வேண்டும்.
பாலில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளையும், பால் அல்லாத தின்பண்டங்களையும் தனித்தனியாகவே பொட்டலமிட்டு விற்பனை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் அல்லது வாடிக்கையாளர்கள் கடைகளில் தரமற்ற, சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டறிந்தால், உடனே 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.