மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? இதோ எளிய டிப்ஸ்கள்!
பருவமழை தமிழ்நாட்டில் துவங்கி விட்டது. தெருவில் தண்ணீர், கொசு தொல்லை, சில நேரங்களில் மின்வெட்டு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை- மழைக்காலத்தில் துணிகளை உலர்த்துவதில் ஏற்படும் சிரமங்கள் தான். அதிலும் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், துணிகளில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். சில நேரங்களில் அது எவ்வளவு தான் வாசனை சோப்பு பயன்படுத்தினாலும், அந்த ஈர வாடை போவதில்லை. இதைத் தவிர்க்க உங்களுக்கு சில எளிய டிப்ஸ்:
துணிகளை காய வைக்க சில எளிய முறைகள்:
அதிக எடை துணிகள்: மழைக்காலத்தில், அதிக கனமான துணிகளை துவைப்பதை தவிர்க்கவும். அது எளிதில் காயாது. தண்ணீர் வடிக்கவும்: உலர்த்தும் முன் துணிகளில் உள்ள தண்ணீர் முழுமையாக வடிந்திருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். இடம்: வீட்டிற்குள் கயிறு கட்டி காய்வதற்கு பதிலாக, 2, 3 ஸ்டாண்டுகளில் இடைவெளியுடன் துணிகளை உலர்த்தவும். ஈரப்பதத்தை கட்டுப்படுத்தவும்: ஏர் பியூரிபையர் அல்லது கல் உப்பு பயன்படுத்துவது, வீட்டின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்த உதவும். ஹேர் ட்ரையர்: தொடர் மழையின் போது, ஹேர் ட்ரையர் அல்லது டிஹைமிடிஃபையர் மூலம் துணிகளை வேகமாக உலர்த்தலாம்.
துர்நாற்றத்தைத் தடுக்க சில எளிய முறைகள்
வினிகர் சேர்க்கவும்: வாஷிங் மெஷினில் டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்க்கவும். இதனால், துணிகளில் துர்நாற்றம் வராது. எலுமிச்சைச் சாறு: துணிகளை அலசிய பின்னர், கடைசி தண்ணீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து, முக்கி எடுத்து உலர்த்தவும். எண்ணெய் சேர்க்கவும்: லாவெண்டர் அல்லது யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களில் சில துளிகளை வாஷிங் மெஷினில் ஊற்றலாம். அல்லது ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எசென்ஷியல் எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்து, துணிகளை காய்வதற்கு முன் லேசாக தெளிக்கவும். இதனால், மழைக்காலத்தில் துணிகளை சுத்தமாகவும் நாற்றம் அடிக்காமலும் வைத்திருக்கலாம்.