சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி! விசா இல்லா பயணக் காலத்தைக் குறைக்கும் தாய்லாந்து - புதிய விதிகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியா உட்பட 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லா தங்கும் கால வரம்பைத் தாய்லாந்து அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவதற்கான காலம் 30 நாட்களாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
விதிமுறைகள்
புதிய விசா விதிமுறைகள்
கடந்த 2024 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க அனுமதி இருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இந்த 60 நாட்கள் சலுகையைப் பெற்று வந்தனர். தற்போது இந்த விதிகளில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ள தாய்லாந்து அரசு, இனி 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பும் பயணிகளுக்கு விசா கட்டாயமாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக அரசாங்க இதழில் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு முழுமையாக அமலுக்கு வரும்.
காரணங்கள்
திடீர் மாற்றத்திற்கான காரணங்கள்
கொரோனா பரவலுக்குப் பிறகு நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகக் கடந்த ஆண்டு இந்த 60 நாட்கள் விசா இல்லா சலுகை வழங்கப்பட்டது. ஆனால், ஒரே நாட்டிற்குப் பலவிதமான விசா விதிவிலக்குகள் அளிக்கப்பட்டதால் நாட்டின் விசா அமைப்பில் குழப்பம் ஏற்பட்டதாகத் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாட்டினர் சிலர் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத வேலைகள் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதே இந்தக் கடுமையான முடிவுக்கு முக்கியக் காரணமாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட, பாங்காக் நகரில் அனுமதியின்றி இயங்கிய சர்வதேசப் பள்ளி ஒன்றில் சோதனை நடத்திய தாய்லாந்து போலீஸார், உரிய உரிமம் இல்லாமல் வேலை செய்த 10 வெளிநாட்டினரைக் கைது செய்தனர்.
பாதிப்புகள்
இந்தியப் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
மலிவான பயணச் செலவு, அழகான கடற்கரைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் காரணமாக இந்தியர்களின் முதன்மைச் சுற்றுலாத் தலமாகத் தாய்லாந்து விளங்கி வருகிறது. இந்த புதிய விசா விதி மாற்றம், அங்கு நீண்ட நாட்கள் தங்கி விடுமுறை கழிக்கத் திட்டமிடும் இந்தியப் பயணிகளைப் பெரிதும் பாதிக்கும். அதேபோல், தாய்லாந்தில் தங்கி ரிமோட் வொர்க் (Remote Work) செய்யும் ஊழியர்களும் இனி கூடுதல் விசா ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டியிருக்கும்.
தற்போதைய நிலை
தாய்லாந்து சுற்றுலாத் துறையின் தற்போதைய நிலை
தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்புக்கு முன்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4 கோடி சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை தந்திருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தாய்லாந்து சுற்றுலாத் துறை மீண்டும் எழுச்சி பெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இதுவரையிலான காலக்கட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 கோடியே 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டிற்குச் சென்றுள்ளனர்.