BP நார்மல் ஆகிடுச்சு.. இனி மாத்திரை எதுக்கு? நீங்களாகவே மருந்தை நிறுத்தினால் ஏற்படும் ஆபத்துக்கள்; மருத்துவர்கள் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இரத்த அழுத்தம் உள்ள பலருக்கு, தொடர்ந்து மருந்துகளை உட்கொண்ட பிறகு ரீடிங் நார்மல் ஆனதும், இனி மாத்திரை எதற்கு? என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. ஆனால், இதய நோய் நிபுணர்கள், இது ஒரு ஆபத்தான முடிவு என்று எச்சரிக்கின்றனர். இரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கே நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள்தான் காரணம். மாத்திரைகளை நிறுத்தினால், மீண்டும் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கும். பல சமயங்களில் இரத்த அழுத்தம் அதிகரிப்பது எந்தவித முன்னெச்சரிக்கை அறிகுறிகளையும் காட்டாது. இதனால் திடீரென இதயம், மூளை மற்றும் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கூடி உயிருக்கே ஆபத்தாக முடியலாம். மருந்தை திடீரென நிறுத்துவது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
சிறுநீரகம்
மாத்திரைகள் சிறுநீரகத்தைப் பாதிக்குமா?
இரத்த அழுத்த மாத்திரைகள் சிறுநீரகத்தைச் சிதைக்கும் என்பது ஒரு தவறான நம்பிக்கை என்று டாக்டர்கள் கூறுகின்றனர். உண்மையில், சிகிச்சை அளிக்கப்படாத உயர் இரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தில் உள்ள சிறிய இரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, அதன் வடிகட்டும் திறனைக் குறைக்கிறது. பிபி மாத்திரைகள் உண்மையில் உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் பணிகளையே செய்கின்றன.
ஆபத்து
நீங்களாகவே முடிவெடுப்பது ஏன் ஆபத்தானது?
நண்பர்களின் ஆலோசனையின் பேரில் அல்லது சமூக வலைதளத் தகவல்களை நம்பி மருந்துகளை நிறுத்துவது மிகப்பெரிய தவறு. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவினாலும், அவை மருந்துகளுக்கு மாற்றாக முடியாது. ஒருவேளை உங்கள் வாழ்க்கை முறை மாற்றத்தால் பிபி குறைந்திருந்தால், மருத்துவர் மட்டுமே மாத்திரையின் அளவைக் குறைக்கலாமா அல்லது நிறுத்தலாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இரத்த அழுத்த மருந்துகள் என்பது உடனடி மாற்றத்திற்கானவை அல்ல, அவை நீண்ட கால அளவில் உங்கள் உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டவை. எனவே, மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை மாற்றுவதோ அல்லது நிறுத்துவதோ கூடாது.